வேலூர் தொகுதியில் நாளை பிரச்சாரம் ஓய்வு: முதல்வர் எடப்பாடி, மு.க.ஸ்டாலின் கடைசிக் கட்ட ஓட்டு வேட்டை

Vellore Loksabha election campaigning ends tomorrow

by Nagaraj, Aug 2, 2019, 09:22 AM IST

வேலூர் மக்களவைத் தொகுதியில் பிரச்சாரம் நாளையுடன் ஓய்கிறது. இறுதிக்கட்ட ஓட்டு வேட்டையில் தீவிரமாக உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இன்று போட்டி பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர்.

வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா புகார் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேலூர் மக்களவைத் தொகுதிக்கு வரும் 5-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் தேர்தல் ரத்தான போது வேட்பாளர்களாக களம் இறங்கியவர்களையே இம்முறையும் அதிமுக மற்றும் திமுக கட்சிகள் களம் இறக்கியுள்ளன. அதிமுக கூட்டணியில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். திமுக சார்பில் முன்னாள் அமைச்சரும் அக்கட்சியின் பொருளாளருமான துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். மேலும் நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி உள்ளிட்ட மொத்தம் 28 பேர் களத்தில் உள்ளனர்.

இந்தத் தொகுதியில் வெற்றி பெறுவதை கவுரவப் பிரச்னையாகக் கருதி அதிமுகவும், திமுகவும் தேர்தல் களத்தில் மும்முரமாக உள்ளன. ஆளும் அதிமுகவின் அமைச்சர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள் என தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமானோர் வேலூரில் முகாமிட்டு தேர்தல் பணி செய்து வருகின்றனர்.

திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை வெற்றி பெறச் செய்ய அக்கட்சி நிர்வாகிகளும் வேலூரில் குவிக்கப்பட்டுள்ளதால் வேலூர் தொகுதியில் தேர்தல் திருவிழா களை கட்டியுள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் முதல் கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் தேர்தல் பிரசாரம் நாளை மாலை 6 மணியுடன் நிறைவடைவதால் இறுதிக்கட்ட பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் இன்று போட்டி பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளனர்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை அணைக்கட்டு, வேலூர் சட்டசபை தொகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பிரச்சாரம் செய்கிறார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களும் தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

அதே போல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் இன்றும் நாளையும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். இன்று மாலை 4 மணிக்கு குடியாத்தம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார்.

நாளை மாலை வேலூர் மண்டி தெருவில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலினுடன் திமுக கூட்டணிகளின் தலைவர்களும் பங்கேற்கின்றனர்.தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட திமுக கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பலரும் இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகின்றனர்.

வேலூர் மக்களவைத் தொகுதியில் 5-ந் தேதி நடைபெற உள்ள வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை 9-ந் தேதி நடைபெறுகிறது.

ராஜ்யசபாவிலும் முத்தலாக் மசோதா நிறைவேற்றம்; அதிமுக, ஐக்கிய ஜனதா தளம் வெளிநடப்பு

You'r reading வேலூர் தொகுதியில் நாளை பிரச்சாரம் ஓய்வு: முதல்வர் எடப்பாடி, மு.க.ஸ்டாலின் கடைசிக் கட்ட ஓட்டு வேட்டை Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை