வேலூரில் 72 % வாக்குப்பதிவு 9ம் தேதி முடிவு தெரியும்

63% votes polled in Vellore constituency around 5pm

by எஸ். எம். கணபதி, Aug 5, 2019, 21:39 PM IST

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் 72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்குகள் எண்ணிக்கை வரும் 9ம் தேதி நடைபெறுகிறது.

தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில், 38 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரலில் தேர்தல் நடந்தது. வேலூர் தொகுதியில் பணப்பட்டுவாடா செய்ததாக புகார் எழுந்ததால், அந்த தொகுதிக்கு மட்டும் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. தேர்தல் நடந்த 39 தொகுதிகளில், தேனியில் மட்டும் அதிமுகவின் ரவீந்திரநாத் வெற்றி பெற, மற்ற 37 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றன.

இந்த நிலையில், தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்ட வேலூர் தொகுதியில் இன்று தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி உள்பட 28 பேர் போட்டியிடுகிறார்கள். பல வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும் ஏ.சி.சண்முகத்துக்கும், கதிர் ஆனந்துக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவியது.

வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு மாலை 6 மணி வரை நடைபெற்றது. இதில், மாலை 5 மணி வரை பதிவான வாக்குகள் சதவீதம் 62.94% ஆகும். சட்டமன்ற தொகுதி வாரியாக பார்த்தால், குடியாத்தம் -67.25%, அணைக்கட்டு -67.61%, கே.வி.குப்பம் -67.1%, வேலூர் -58.55%, ஆம்பூர் -65.17%, வாணியம்பாடி -52% வாக்குகள் பதிவாகின.

மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்த பின்பு இறுதி நிலவரம் கணக்கிடப்பட்டது. இதில், மொத்தம் 72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். பதிவான வாக்குகள் எண்ணிக்கை 9-ம் தேதி நடக்கிறது. வெற்றி பெறப் போவது திமுகவா, அதிமுகவா என்பது காலை 11 மணிக்கு தெரிந்து விடும்.

You'r reading வேலூரில் 72 % வாக்குப்பதிவு 9ம் தேதி முடிவு தெரியும் Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை