காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து பறிப்பு பிரச்னையை மேலும் சிக்கலாக்கும் தெஹ்லான் பாகவி கருத்து

scrapping of 370 will make kashmir issue more critical and leads to make it international issue : stpi

by எஸ். எம். கணபதி, Aug 6, 2019, 09:36 AM IST

எஸ்டிபிஐ கட்சியின் தேசிய துணை தலைவர் தெஹ்லான் பாகவி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஜனநாயக நெறிமுறைகளை காற்றில் வீசியெறிந்து வரும் மத்திய பாஜக அரசு, ஒரு மாபெரும் ஜனநாயக படுகொலையை காஷ்மீர் பிரிவு 370 சட்டப்பிரிவு நீக்கியதன் மூலம் நிகழ்த்தியுள்ளது. இதன்மூலம் முன்னாள் பிரதமர் நேரு, காஷ்மீர் மக்களுக்கும் ஐக்கிய நாடுகள் அவைக்கும் அளித்த வாக்குறுதியை முறித்து, காஷ்மீர் மக்களுக்கு மாபெரும் பச்சை துரோகத்தை நிகழ்த்தியுள்ளது மத்திய பாஜக அரசு.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்த வேளையில், இந்தியாவை முற்றாக நம்பிய காஷ்மீர் மக்களுக்கு, ஏற்கனவே இருந்த காங்கிரஸ் அரசுகள் செய்த துரோகங்கள் தான் காஷ்மீர் பிரச்சினையை சிக்கலாக்கியது. பாஜக அரசின் இந்த சர்வாதிகார நடவடிக்கை மேலும் இப்பிரச்சினையை சிக்கலாக்கவும், சர்வதேச பிரச்சினையாகவும் மாற்றவுமே பயன்படும்.

காஷ்மீருக்கு மட்டுமே சிறப்பு அந்தஸ்து உள்ளது என்ற போலியான பிம்பம் உருவாக்கப்படுகிறது. மணிப்பூர், நாகாலாந்து உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களுக்கும் இதுபோன்ற பல்வேறு சிறப்பு அந்தஸ்துகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் அதைப்பற்றி பாஜக ஏன் பேசுவதில்லை?

காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்துதான் அது இந்தியாவுடன் ஒருங்கிணைந்த பகுதி என்பதற்கான உறுதியை தருகிறது. அந்த ஒருங்கிணைப்பை உடைத்து நொறுக்கியுள்ளது மத்திய அரசு. மிகவும் பாரதூரமான பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய இந்த நடவடிக்கை பற்றி அரசு ஏன் எதிர்கட்சிகளை கலந்து ஆலோசிக்கவில்லை? காஷ்மீர் மக்கள் பிரதிநிதிகளுடன், முன்னாள் ஆட்சியாளர்களுடன், அரசியல் கட்சிகளுடன் ஏன் விவாதிக்கவில்லை? இது மக்கள் அரசா? ராணுவ அரசா?

மக்களவை நடைபெற்றுவரும் காலத்தில் மக்களவைக்கு தெரிவிக்காமலேயே ஏற்கனவே ஒருமுடிவை எடுத்துவிட்டு ராணுவத்தை காஷ்மீரில் குவித்து, ஒரு நெருக்கடி நிலையை உருவாக்கிவிட்டு, மக்களவையில் ஒரு அறிவிப்பை மட்டும் செய்வது நாட்டின் நாடாளுமன்ற ஜனநாயகத்தை கேலி கூத்தாக்குவதை தவிர வேறேன்ன?
காஷ்மீருக்கு ஏன் சிறப்பு அந்தஸ்து என கேட்பவர்கள், மற்ற மாநிலங்களை போன்ற அந்தஸ்தை கொடுக்காமல் காஷ்மீரை யூனியன் பிரதேசமாக மாற்றுவது அம்மக்களுக்கு செய்யும் அநியாயம் என ஏன் சிந்திப்பதில்லை?

ஒரு மாநில மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியும் அக்கிரமும் அநியாயமும் துரோகமும் எப்படி நமது நாட்டில் அமைதியையும் ஒற்றுமையையும் உருவாக்கும்?.
சிறப்பு அந்தஸ்து மூலம் கார்ப்பரேட் முதலாளிகளிடமிருந்தும், பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்தும் காத்து வந்த காஷ்மீர் மண்ணை, பெரும் இயற்கை வளங்களை கொண்ட பூமியை இனி கூறுபோட்டு விற்கவும், அவர்கள் கொள்ளை அடிக்கவும் தான் இந்த நடவடிக்கையை மத்திய பாஜக அரசு மேற்கொண்டுள்ளதே தவிர, மற்ற மாநில மக்கள் அங்கு நிலம் வாங்குவதற்காக அல்ல.

நாடு ஏற்கனவே அச்சத்திலும், பொருளாதார பின்னடைவிலும் இருக்கும் நிலையில், அரசின் இந்த நடவடிக்கையினால் நிலைமை மேலும் சிக்கலாகும். மத்திய அரசின் இந்த ஜனநாயக படுகொலைகளுக்கு எனது வன்மையான கண்டனங்கள்.

இந்த விவகாரத்தில் மதங்களை கடந்து அனைத்து ஜனநயாக சக்திகளும் ஒன்றுபட்டு, காஷ்மீர் மக்களுக்கான உரிமைகளை காக்க முன்வர வேண்டும்.

இவ்வாறு தெஹ்லான் பாகவி கூறியுள்ளார்.

காஷ்மீர் தொடர்பான மசோதாக்கள் ; மாநிலங்களவையில் நிறைவேறியது

You'r reading காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து பறிப்பு பிரச்னையை மேலும் சிக்கலாக்கும் தெஹ்லான் பாகவி கருத்து Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை