ஜம்மு காஷ்மீர் மசோதாக்களை அதிமுக ஆதரித்த பின்னணி என்ன?

Why admk supports scrapping of article 370?

by எஸ். எம். கணபதி, Aug 6, 2019, 12:34 PM IST

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு ரத்து செய்ததற்கு அதிமுக முழு ஆதரவு அளித்தது ஏன்? 

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு ரத்து செய்துள்ளது. மேலும், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்று இரு யூனியன் பிரதேசங்களாக அம்மாநிலம் பிரிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, மாநிலங்களவையில் ஜம்மு-காஷ்மீர், லடாக் என்று 2 யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை வழங்கும் 370 மற்றும் 35ஏ சட்டப்பிரிவை ரத்து செய்வதற்கான தீர்மானமும் நிறைவேறியது. இதில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள அதிமுக வரவேற்று, வாக்களித்துள்ளது. அதிமுக இந்த விஷயத்தில் மட்டும் அக்கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கருத்தை பின்பற்றியிருக்கிறது என்று சொல்லலாம்.

காரணம், கடந்த 1984ம் ஆண்டு ஜூலை 24ம் தேதியன்று, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நடந்த பரூக் அப்துல்லா ஆட்சியை அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி கலைத்தார். அப்போது, அதிமுகவில் மாநிலங்களவை உறுப்பினராக ஜெயலலிதா இருந்தார். காஷ்மீர் அரசை கலைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெயலலிதா, மாநிலங்களவையில் பேசினார்.
அவர் பேசுகையில், ‘‘அரசியல் சட்டப்பிரிவு 356ஐ பயன்படுத்தி, ஜம்மு-காஷ்மீர் மாநில அரசைக் கலைத்திருக்கிறீர்கள். இதே பிரிவின் கீழ் தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சியும் கலைக்கப்பட்ட சம்பவம் நடந்திருக்கிறது.

இந்தச் சட்டப் பிரிவைப் பயன்படுத்துவது என்பது இது முதல் முறையல்ல. இதுவே கடைசி முறையாகவும் இருக்கப் போவதுமில்லை. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, இந்தச் சட்டம் பலமுறை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அரசியலமைப்பு சட்டத்தில் இந்தப் பிரிவு இருக்கும் வரை இதை மத்திய அரசு பயன்படுத்த வாய்ப்பிருக்கிறது’’ என்று பேசினார்.

அவர் பேச்சை முடிக்கும் போது, ‘‘கடைசியாக, உள்துறை அமைச்சருக்கு 2 கேள்விகள் எழுப்புகிறேன். ஜம்மு-காஷ்மீர் அரசைக் கலைத்து விட்டு அங்கு கவர்வர் ஆட்சியைக் கொண்டு வருவதுதான் மத்திய அரசின் திட்டமா? ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து விட்டு, இந்தியாவின் மற்ற பகுதிகளுடன் அம்மாநிலத்தையும் இணைக்காமல் தாமதிப்பது ஏன்? மற்ற மாநிலங்களைப் போல், காஷ்மீைரயும் அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் ஏன் கொண்டு வரக் கூடாது?’’ என்று கேட்டார்.

1984ல் ஜெயலலிதா எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் மத்திய பாஜக அரசின் தற்போதைய முடிவுகள் அமைந்துள்ளது. எனவே, அதிமுகவினர் எந்த தயக்கமும் இல்லாமல், காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை விலக்கும் முடிவுக்கு அதிமுக முழு ஆதரவு அளித்திருக்கின்றனர்.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப் பிரிவு ரத்து; அமித்ஷா அறிவிப்பு - ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகள் கொந்தளிப்பு

You'r reading ஜம்மு காஷ்மீர் மசோதாக்களை அதிமுக ஆதரித்த பின்னணி என்ன? Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை