காஷ்மீர் விவகாரத்தில் நாளை டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் 14 கட்சிகள் ஆதரவு

Dmk protest in Delhi on Kashmir issue tomorrow, 14 political parties support

by Nagaraj, Aug 21, 2019, 14:55 PM IST

ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் நாளை திமுக சார்பில் நடத்தப்படும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க 14 கட்சிகள் சம்மதம் தெரிவித்துள்ளன.

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு கடந்த 70 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. மேலும் அம்மாநிலத்தை ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கவும் முடிவு செய்து, அதற்கான தீர்மானம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இதற்கு குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளித்து விட்டார்.

காஷ்மீர் பிரச்னையில் மத்திய அரசின் இந்த முடிவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
மேலும் காஷ்மீரில் உள்ள அரசியல் தலைவர்களை வீட்டுக் காவலில் மத்தியஅரசு வைத்துள்ளதற்கும் பெரும் எதிர் .ப்பு கிளம்பியுள்ளது.

இதனால் காஷ்மீர் பிரச்னை தொடர்பாக திமுக சார்பில் நாளை காலை 11 மணிக்கு டெல்லி ஜந்தர் மந்தரில் அனைததுக்கட்சிகளின் எம்.பி.க்கள் பங்கேற்கும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும், இதில் எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் எனவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். மேலும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள அனைத்து கட்சிகளுக்கும் திமுக தலைவர் ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார்.

மு.க.ஸ்டாலினின் அழைப்பை ஏற்று, இந்தப் போராட்டத்தில் பங்கேற்கப் போவதாக 14 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஆம்ஆத்மி, தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி கட்சி, புரட்சிகர சோசலிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் அனைவரும் இந்த போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

You'r reading காஷ்மீர் விவகாரத்தில் நாளை டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் 14 கட்சிகள் ஆதரவு Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை