அடுத்தது ஏர்செல் மேக்ஸிஸ் வழக்கு சுப்பிரமணிய சாமி பேட்டி

p.c. may be arrested in aircel maxis case also, subramania samy said.

by எஸ். எம். கணபதி, Aug 22, 2019, 17:30 PM IST

ப.சிதம்பரத்தின் மீது அடுத்து ஏர்செல் மேக்ஸிஸ் வழக்கு நடவடிக்கைகள் தொடரும் என்று பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார்.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை நேற்றிரவு சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். கடந்த 2007ல் மும்பையைச் சேர்ந்த இந்திராணி முகர்ஜியின் ஐ.என்.எக்ஸ். மீடியா கம்பெனிக்கு மொரிசியஸ் கம்பெனிகளில் இருந்து முறைகேடாக ரூ.305 கோடி அன்னிய முதலீடு வந்தது. அப்போது அந்த விதிமீறல்களை நிவர்த்தி செய்து, அந்த முதலீட்டுக்கு அன்னிய முதலீடு மேம்பாட்டு வாரியம்(எப்.ஐ.பி.பி) ஒப்புதல் அளித்தது.

அப்போது மத்திய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம், விதிகளை மீறி இ்ப்படி ஒப்புதல் அளிக்கச் செய்தார். இதற்காக அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தின் அட்வான்டேஜ் ஸ்ட்ரேட்டஜிக் கன்சல்டிங் கம்பெனிக்கு லஞ்சமாக 10 லட்சம் அமெரிக்க டாலரை இந்திராணியின் ஐ.என்.எக்ஸ். கம்பெனி கொடுத்தது என்பதுதான் அந்த வழக்கு.
டெல்லியில் உள்ள சிதம்பரத்தின் டெல்லி வீட்டுக்கு சிபிஐ அதிகாரிகள் சுவர் ஏறி குதித்து சென்று அவரை கைது செய்தனர்.

இந்நிலையில், சிதம்பரத்தின் மீதான வழக்குகளில் ஆதாரங்களை வெளியிட்டு அவ்வப்போது பரபரப்பு ஏற்படுத்தி வரும் பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியசுவாமி ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கின் எப்.ஐ.ஆரில் தனது பெயரே இல்லை என்று சிதம்பரம் கூறுகிறார். எப்.ஐ.ஆரில் முதலில், ‘சில தெரியாத நபர்கள்’ என்றுதான் அவரையும் குறிப்பிட்டிருந்தார்கள். அதற்கு பிறகு குற்றப்பத்திரிகையில் அவர் பெயர் சேர்க்கப்பட்டிருக்கிறது. அவர் இதையேதான் டெல்லி ஐகோர்ட்டில் சொல்லியிருந்தார். ஆனால், எப்.ஐ.ஆரில் பெயர் இல்லை என்பதை நீதிமன்றம் ஏற்கவில்லை. அவர்தான் முக்கியமான சதிகாரர் என்று கேஸ் டைரிகளை பார்த்து விட்டு நீதிபதி கூறியிருக்கிறார். அந்த நீதிமன்றத் தீர்ப்பைப் படித்து பார்த்தால் முழு விவரம் தெரியும்.

இந்திராணி முகர்ஜி, கார்த்தி சிதம்பரத்திற்கு வங்கிக் கணக்கில் ஒரு மில்லியன் டாலர் போட்டிருக்கிறார். எந்தக் கணக்கு என்பதை எல்லாம் அவரே சொல்லியிருக்கிறார். எனவே, அதையெல்லாம் பார்க்க வேண்டும்.

இதை விட பெரிய வழக்கு ஏர்செல் மேக்ஸிஸ் வழக்கு. அதிலும் எப்.ஐ.பி.பி அனுமதி கொடுத்ததில் பெரிய ஊழல் நடந்திருக்கிறது. அதையும் விசாரிப்பார்கள்.

இப்போது நேர்மையானவர் போல் பேசும் சிதம்பரம், உள்துறை அமைச்சராக இருந்த போது என்ன செய்தார்? லஷ்கர் தொய்பா தீவிரவாதியை கண்டு கொள்ளாமல் விட்டார். ஆனால், லெப்டினன்ட் ஜெனரலை கைது செய்தார். பெண் சாத்வியை இந்து தீவிரவாதி என்று கைது செய்து டார்ச்சர் கொடுத்தாரே?
இவ்வாறு சாமி கூறினார்.

2 மணி நேரத்தில் ஆஜராகணும்.. நள்ளிரவில் நோட்டீஸ்.. ப.சிதம்பரத்துக்கு சிபிஐ நெருக்கடி ; எந்நேரமும் கைதாக வாய்ப்பு

You'r reading அடுத்தது ஏர்செல் மேக்ஸிஸ் வழக்கு சுப்பிரமணிய சாமி பேட்டி Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை