Sunday, Sep 24, 2023
Dibee Pictures

ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!

by Madhavan May 5, 2021, 12:47 PM IST

மத்திய விஸ்டா திட்டத்தின் கீழ் பிரதமர் மோடிக்கு ரூ.13,450 கோடியில் கட்டப்பட்டு வரும் வீட்டிற்கான செலவை வைத்து, 45 கோடி இந்தியர்களுக்குத் தடுப்பூசி செலுத்தலாம் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியுள்ளார்.

நாடு முழுவதும் ஆக்சிஜன் தட்டுபாடு தலைவிரித்தாடுகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏராளமான கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் பிரதமருக்ககு வீடு கட்டித்தரும் திட்டம் பலரையும் எரிச்சலடையச் செய்துள்ளது. இந்த திட்டத்திற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

புதிய நாடாளுமன்றம் கட்டும் மத்திய விஸ்டா திட்டத்தைக் கண்காணிக்கும் குழுவிடம் மத்திய பொதுப்பணித்துறை அளித்த அறிக்கையில், “2022ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதிக்குள் பிரதமர் இல்லம் கட்டி முடிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல்காந்தி, ``பிரதமர் மோடியின் செருக்கு தான் மக்களின் வாழ்வாதாரத்தைவிடப் பெரியது. ரூ.13,450 கோடியை மக்களின் தடுப்பூசித் திட்டத்துக்குச் செலவிடாமல், கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வாங்க செலவிடாமல், பெருந்தொற்றுக் காலத்தில் வறுமையில் வாடும் மக்களுக்கு நிதியுதவி வழங்கச் செலவிடாமல், எதற்காக மத்திய விஸ்டா திட்டத்துக்குச் செலவிடுகிறார்கள்.


மத்திய விஸ்டா திட்டத்துக்காகச் செலவிடும் ரூ.13,450 கோடியின் மூலம் 45 கோடி மக்களுக்குத் தடுப்பூசி செலுத்த முடியும். ஒரு கோடி ஆக்சிஜன் சிலிண்டர்கள் வாங்கலாம், 2 கோடி குடும்பங்களுக்கு நியாய் திட்டத்தின் மூலம் ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்கலாம். ஆனால் மக்களின் உயிரைவிடப் பிரதமரின் ஈகோதான் பெரியது” எனத் தெரிவித்தார்.

பிரியங்கா காந்தி வதேரா தன் ட்விட்டர் பக்கத்தில் இதே தொனியில் மத்திய அரசையும் உ.பி. அரசையும் சாடினார். அதில் அவர் “மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, ஆக்சிஜன் பற்றாக்குறையாலும், தடுப்பூசி, மருத்துவமனையில் படுக்கைகள், மருந்துகள் பற்றாக்குறையாலும் தடுமாறுகிறார்கள்.

நாட்டில் உள்ள அனைத்து வளங்களையும் ஒன்றுதிரட்டி இப்போது மக்களைக் காப்பதுதான் சிறந்ததாக இருக்கும். ஆனால், அதை விடுத்து, பிரதமர் மோடிக்கு ரூ.13 ஆயிரம் கோடியில் புதிய வீடு கட்டுவதில் மத்திய அரசு ஆர்வம் காட்டுகிறது. மத்திய அரசு எதற்கு முன்னுரிமை கொடுத்துச் செலவிடுகிறது, எங்கு நிதியைத் திருப்புகிறது என்பது மக்களுக்குத் தெரிய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.


You'r reading ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்! Originally posted on The Subeditor Tamil

More Politics News

Cricket Score