
விளையாட்டை பொறுத்த வரை ஒவ்வவொரு வீரரும் சச்சின் போல ஆகி விட முடியாது. ஆனால், அவரே உலகக் கோப்பையை வெல்ல 22 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியது இருந்தது. கால்பந்து உலகின் ஜாம்பவான் ரொனால்டோவுக்கு இன்று வரை உலகக் கோப்பை கை கூடவில்லை. அவர் மட்டுமல்ல ஜோகன் கிரைப், ஜார்ஜ் பெஸ்ட், பாலோ மால்டினி போன்ற மிகச்சிறந்த வீரர்களும் உலகக் கோப்பையை வென்றது இல்லை. ஜியான்லுகி பப்பன் ஒரு முறை கூட சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றதில்லை. பிரையன் லாரா கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றதில்லை. தனிப்பட்ட திறமை மட்டுமே கோப்பையை வென்று தந்து விடாது என்பதற்கு இதுவே நல்ல உதாரணம்.
விராட் கோலி 22வயதில் அவர் ஒருநாள் உலகக் கோப்பையையும் 24 வயதில் சாம்பியன்ஸ் டிராபியையும் வென்றார். டி 20 உலகக் கோப்பையையும் நாட்டுக்காக அவர் வென்றிருக்கிறார். ஆனால், அவரின் ஒரு கனவு மட்டும் இன்னும் நிறைவேறவில்லை. அதுதான், ஐ.பி.எல் கோப்பை.
இந்த கோப்பையை வெல்ல 18 ஆண்டு காலமாக அவர் போராடிக் கொண்டிருக்கிறார். முன்னதாக, 3 முறை ஐ.பி.எல் இறுதி ஆட்டத்தில் விராட் கோலி விளையாடியுள்ளார். ஐ.பி.எல் தொடரில் மட்டும் 8,500 ரன்களை அவர் அடித்துள்ளார். ஒரே சீசனில் 975 ரன்களும் அடித்து சாதித்துள்ளார். ஆனால், கோப்பை மட்டும் இன்னும் அவரின் கரங்களில் தவழவில்லை. இந்த முறையாவது விராட் கோலி கோப்பையை வெல்வாரா? என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இப்போதும், ஆர்.சி.பிக்கு கோப்பை இல்லையென்றால், ஒரு கிரிக்கெட் ரசிகராக அனைவருமே வருத்தமடைவார்கள்.
ஐ.பி.எல் தொடரின் இறுதிப் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் ஆ.சி.பி இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் மோதுகிறது. இரு அணிகளும் கோப்பையை இதுவரை வென்றதில்லை.