
ஃபிபா கிளப் உலகக் கோப்பையில் விளையாடும் திட்டம் எதுவும் இல்லை என்று நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்துள்ளார்.
உலகளவில் பிரபலமான கிளப் கால்பந்து அணிகள் பங்கேற்கும் உலகக் கோப்பை போட்டி அமெரிக்காவில் வரும் 14ஆம் தேதி தொடங்கி ஜூலை 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
கால்பந்து ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்தப் போட்டியில் ஆறு கூட்டமைப்புகளைச் சேர்ந்த 32 அணிகள் களம் காண்கின்றன.
ஃபிபா கிளப் உலகக் கோப்பை போட்டியில் முன்னணி வீரர்கள் யாரெல்லாம் விளையாட உள்ளனர் என்பது பற்றி ரசிகர்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர்.
அந்த வகையில், சௌதி அரேபியாவின் அல் - நாசர் அணிக்காக விளையாடி வரும் போர்ச்சுகலின் முன்கள வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, கிளப் உலகக் கோப்பையில் பங்கேற்பாரா என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
ஆனால், ரசிகர்களின் தலையில் பேரிடியாய் இறங்கும் வகையில், கிளப் உலகக் கோப்பையில் விளையாடும் திட்டம் எதுவும் இல்லை என்று ரொனால்டோ கூறியுள்ளார். தன்னைப் பொறுத்தவரையில் கிளப் உலகக் கோப்பையில் விளையாடுவதில்லை என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக ரொனால்டோ தெரிவித்துள்ளார்.
இந்தத் தொடரில் கலந்துகொள்ளும் சில கிளப்புகளிடமிருந்து அழைப்புகள் வந்ததாகவும், ஆனால் அவற்றை ஏற்கும் எண்ணமில்லை எனவும் கிறிஸ்டியானோ ரொனால்டோ குறிப்பிட்டுள்ளார்.
ஒருவர் எல்லா வகையான போட்டிகளிலும் பங்கேற்க முடியாது என்று ரொனால்டோ விளக்கமளித்துள்ளார். தேசிய அணியைத் தவிர வேறு எதைப் பற்றி பேசுவதிலும் அர்த்தமில்லை என்று கிறிஸ்டியானோ ரொனால்டோ கூறியுள்ளார்.