இன்று நேஷன்ஸ் லீக் கால்பந்து இறுதிப்போட்டி- ரொனால்டோவை எதிர்கொள்ளும் லாமின் யாமல்

Nations-League-football-final-today-Lamine-Yamal-to-face-Ronaldo

மியூனிச், ஜூன்.08; கால்பந்து ரசிகர்கள் மத்தியில் பேரார்வத்தை ஏற்படுத்தியிருக்கும் நேஷன்ஸ் லீக் இறுதிப் போட்டி, இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு நடைபெறுகிறது.

இதில் ஸ்பெயின் மற்றும்போர்ச்சுகல் அணிகள் மோதுகின்றன. இதில் மூத்த வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவை ஸ்பெயினின் இளம் வீரர் லாமின் யாமல் முதன்முறையாக எதிர்கொள்ளவிருப்பதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

கடந்த வியாழன்று நடைபெற்ற அரையிறுதியில் பிரான்ஸ் அணியை 5-க்கு 4 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணி வீழ்த்தி, இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.

இதில், இரண்டு கோல்கள் அடித்து ஆட்டநாயகனாக தேர்வான ஸ்பெயினின் இளம் நட்சத்திர வீரர் லாமின் யாமல் தற்போது உலகின் கவனத்தை ஈர்த்து வருகிறார். 17 வயதே நிரம்பிய யாமல் தன்னைவிட 23 வயது மூத்தவரான போர்ச்சுகலின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவை முதன்முறையாக இன்று எதிர்கொள்கிறார்.

"நான் யார் என்பதை நிரூபிக்க இன்றைய இறுதிப்போட்டி வாய்ப்பளிக்கும்" என்று நம்புவதாக யாமல் கூறியுள்ளார்.
"இது ஒரு சிறப்பு ஆட்டம், ஒரு சிறந்த அணிக்கு எதிரான இறுதிப் போட்டி எங்களுக்கு கூடுதல் உந்துதலைத் தருகிறது," என்று யாமல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ரொனால்டோ பற்றிய கேள்விக்கு பதிலளித்த யாமல், "அவர் ஒரு கால்பந்து ஜாம்பவான்," என்று வர்ணித்தார்.

"எல்லா வீரர்களையும் போலவோ, எனக்கும் ரொனால்டோ மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு" என யாமல் தெரிவித்தார்.
ஸ்பெயின் பயிற்சியாளர் லூயிஸ் டி லா ஃபியூன்ட் கூறுகையில், "ரசிகர்கள் இரண்டு பலம்வாய்ந்த அணிகளைப் பார்ப்பார்கள்" என்று தெரிவித்தார். "இது உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு சமமானதாக இருக்கலாம்" என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
நேஷன்ஸ் லீக் கால்பந்து இறுதிப் போட்டி இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 12.15 மணியளவில் நடைபெற உள்ளது.