
மியூனிச், ஜூன்.11; UEFA நேஷன்ஸ் லீக் வெற்றிக்குப் பிறகு சமூக ஊடகங்களில் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
ஜெர்மனியின் மியூனிச் நகரில் கடந்த ஞாயிறன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் போர்ச்சுகல் அணி ஸ்பெயினை வீழ்த்தி இரண்டாவது முறையாக நேஷன்ஸ் லீக் கோப்பையை உச்சி முகர்ந்தது.
இப்போட்டியின் 61ஆவது நிமிடத்தில் அடித்த அற்புதமான கோலால் ரொனால்டோ சமூக வலைதளங்களில் மீண்டும் பாராட்டப்படும் நபர் ஆனார்.
40 வயதான ரொனால்டோவின் தலைமைத்துவம் மற்றும் விளையாட்டின் மீதான ஒப்பிடமுடியாத ஆர்வத்தை மெச்சி ரசிகர்கள் அவரைப் பாராட்டி எழுதி வருகின்றனர்.
போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரொனால்டோ, தனக்கு காயம் ஏற்பட்டிருந்ததை குறிப்பிட்டதை சுட்டிக்காட்டி, அவரது உறுதியான மனநிலையை ரசிகர்கள் போற்றுகின்றனர்.
அசௌகரியம் இருந்தபோதிலும் விளையாடுவதில் உறுதியாக இருந்ததாக ரொனால்டோ கூறியிருந்ததையும் ரசிகர்கள் சிலாகித்துப் பேசி வருகின்றனர்.
"தேசிய அணிக்காக எனது காலை உடைக்க வேண்டியிருந்தால், நான் அதையும் செய்திருப்பேன்" என ரொனால்டோ குறிப்பிட்டிருந்ததையும் ரசிகர்கள் நினைவு கூர்ந்துள்ளனர்.
அதேவேளையில், "நீண்ட காலம் விளையாட்டிலேயே இருப்பது பைத்தியக்காரத்தனமானது" என்றும் சில ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.