பெண் அமைச்சரோடு மோதிய கே.சி.வீரமணி! உள்ளடி வேலையால் கலங்கும் வேலூர்

KCVeeramani, who collided with the womans minister in Vellore

Jan 15, 2019, 08:52 AM IST

தமிழக வணிகவரித்துறை மந்திரி கே.சி.வீரமணியின் செயல்பாடுகளால் அதிமுக தொண்டர்கள் கொதிப்பில் இருக்கிறார்கள். கூட்டங்களில் பேசும்போதெல்லாம் ஜெயலலிதாவைவிட எடப்பாடி மேல் என்பது போல அவர் பேசுவதுதான் காரணமாம்.

வேலூர் நாட்றாம்பள்ளியில் ரேசன் அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசு வழங்கும் விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மந்திரி வீரமணி, பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாயை வழங்க உத்தரவிட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஜெயலலிதா வழியில் ஆட்சி நடத்தி வரும் அவர், தாய் எட்டடி பாய்ந்தார் குட்டி 32 அடி பாய்வது போல ஆட்சி நடத்துகிறார். இவரைப் போல சிறந்த முதல்வரைப் பார்த்ததில்லை எனப் பேசியிருக்கிறார். இதனால் கொதித்த தொண்டர்கள், 'பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக இந்தளவுக்கு ஐஸ் வைக்கலாமா...அம்மாவையே இருட்டடிப்பு செய்யும் வேலைகளை அமைச்சர்கள் செய்து வருகிறார்கள்' எனப் புலம்புகின்றனர்.

மந்திரி பேச்சு ஒருபுறம் இருந்தாலும், தொழில்துறை மந்திரி நிலோபர் கபிலுடன் நேரடி யுத்தம் நடத்தி வருகிறார் வீரமணி. இந்தச் சண்டையால் தொகுதிக்குள் நடக்கும் விழாக்களில் வீரமணி பெயரைப் போடாமலேயே போஸ்டர் அடிக்கிறது நிலோபர் தரப்பு. பாராளுமன்றத் தேர்தல் பணிகளிலும் இருவருக்கும் இடையே நல்லுறவு இல்லையாம். இதற்குப் பதில் கொடுக்கும் வீரமணி தரப்பினர், அண்ணன் தயவில் அமைச்சரானவர் நிலோபர். இதையெல்லாம் மறந்துவிட்டு கோஷ்டி மோதலை உருவாக்கி வருகிறார். மாவட்டத்தில் அண்ணனுக்குத்தான் செல்வாக்கு. அந்தம்மாவுக்காக யாரும் ஓட்டுப் போடவில்லை. அடுத்த தேர்தலில் அவரை நிச்சயம் தோற்கடிப்போம். போஸ்டரில் பெயர் போடாததற்கெல்லாம் அண்ணன் வருத்தப்படவில்லை' என்கிறார்கள்.

தொழில்துறையில் வீரமணியின் சிபாரிசுகளை நிராகரித்ததுதான் மோதலுக்கான தொடக்கப்புள்ளியாம். இவர்கள் சண்டையால் பூத் கமிட்டி வேலையைச் செய்ய முடியாமல் தவிக்கின்றனர் வேலூர் மாவட்ட ரத்தத்தின் ரத்தங்கள்.

You'r reading பெண் அமைச்சரோடு மோதிய கே.சி.வீரமணி! உள்ளடி வேலையால் கலங்கும் வேலூர் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை