கதறவிட்ட +11 வைர கற்கள்.. கொடநாடு கொலை, கோவை ஜூவல்லரி, பெங்களூர் சிறை- 'ஷாக்’ தகவல்கள்

வைர சந்தையை புரட்டிப் போட்டிருக்கும் +11 வைர கற்கள் விவகாரம்தான் நாடு முழுவதும் பேசுபொருளாக மாறி இருக்கிறது.

ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போதே பெருமளவு பணத்தை வைரக்கற்களாக மாற்றும் நடவடிக்கைகள் மும்முரமாக நடைபெற்றன. கோவையில் மையமாக செயல்படும் வைர விற்பனைக்கு புகழ்பெற்ற கடைதான் இந்த பொறுப்பை கனகச்சிதமாக மேற்கொண்டது.

ஒரு சின்ன சுருக்குப் பைகளில் பல நூறு கோடி மதிப்பிலான வைரங்களை அடைத்துவிட முடியும் என ஐடியா கொடுத்து அதற்கான தொகையை பெற்றது அந்த வைர விற்பனை நிறுவனம். இதனால் போயஸ் கார்டனுக்கு வந்த தொகை எல்லாம் அப்படியே கோவைக்கு கொண்டு செல்லப்பட்டு வைரமாக்கப்பட்டன.

கோவையில் இருந்து கொடநாடு பங்களாவுக்கு இந்த வைர சுருக்குப் பைகள் கொண்டு செல்லப்பட்டு பதுக்கப்பட்டன. ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போதுதான் பணமதிப்பிழப்பு நடவடிக்கை நடைமுறைக்கு வந்தது.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் கொடநாடு பங்களா கொலை, கொள்ளை சம்பவத்தின் போதும் இந்த வைரங்கள் குறித்து பேச்சுகள் எழுந்து அடங்கின. உயர் ரக வாட்சுகள் மட்டும் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்பட்டன.

அந்த ஒவ்வொரு வாட்சின் ஒவ்வொரு மணித்துளிக்கும் ஒரு வைரக் கல் என கணக்கிட்டாலே அதுவே பல நூறு கோடி ரூபாய் தேறும் எனவும் ஊடகங்கள் குறிப்பிட்டிருந்தன. இந்நிலையில்தான் திடீரென +11 ரக வைர கற்கள் சந்தையில் பெருமளவு இறக்கப்பட்டு பல்லாயிரம் கோடி ரூபாய் கைமாறியிருக்கிறது.

இதனால் வைர சந்தை ஒட்டுமொத்தமாக 30%க்கும் அதிகமான சரிவை சந்தித்துவிட்டது. ஜெயலலிதா வசம் இருந்த பல லட்சம் கோடி மதிப்பிலான இந்த வைர கற்கள் இப்போது சந்தைக்கு எப்படி வந்தது? யார் இவற்றை இறக்கிவிட்டது? என்கிற கேள்விகள் பூதாகரமாக வெடித்திருக்கின்றன.

இக்கேள்விகளுக்கான விடை சசிகலா அடைத்துவைக்கப்பட்டிருக்கும் பெங்களூரு சிறையில்தான் இருக்கிறதாம். தினகரன் தரப்பை பொறுத்தவரை தேர்தல் செலவு உட்பட அனைத்துக்கும் விவேக்கிடம்தான் நிற்கிறார்.. அவர்கள் தரப்பில் மிடாஸ் பணத்தைத் தவிர ரொக்கமாக எதுவும் இல்லை.

இதனால் கடந்த ஒரு மாத காலமாக தினகரனின் வழக்கறிஞர்கள் பலர் சசிகலாவை தொடர்ந்து சந்தித்து பேசி வந்துள்ளனர். இந்த பேச்சுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில்தான் வைர கற்கள் சந்தையில் இறக்கிவிடப்பட்டிருக்கின்றன.

ஆகையால் சசிகலா அண்ட் கோதான் தேர்தல் செலவுக்காக வைர கற்களை சந்தையில் இறக்கியது எனவும் இதன் மூளையே தினகர்தான் எனவும் கூறுகின்றனர்.

- அருள் திலீபன்

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

மேலும் செய்திகள்