19.5 டிஎம்சி பாக்கி என்னாச்சு...காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழக அரசு மெத்தனம் ஏன்?- வைகோ கேள்வி

Why should not claim to get pending 19.5 tmc cauvery water: Mdmk leader vaiko questions TN govt

by Nagaraj, May 29, 2019, 15:15 PM IST

காவிரியில் கடந்த டிசம்பர் முதல் மே மாதம் வரையிலான காலக்கட்டத்தில் தமிழகத்துக்கு திறக்க வேண்டிய 19.5 டிஎம்சி நீரைப் பெற மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் வலியுறுத்தாமல் தமிழக அரசு மெத்தனம் காட்டியது ஏன்? என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்று கடந்த 15-ந் தேதி நான் அறிக்கை விடுத்திருந்தேன். நேற்று காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம், டெல்லியில் நடந்தது. தமிழகத்தின் சார்பில் இதில் கலந்துகொண்ட பொதுப்பணித் துறைச் செயலாளர் பிரபாகர் அளித்த பேட்டியில், காவிரி ஆணையத்தின் கூட்டத்தில் குறுவை சாகுபடி, தமிழக விவசாயிகளின் நிலை மற்றும் நீர் பற்றாக்குறை பிரச்சினைகளை தெளிவாக எடுத்துரைத்த பின்னர் காவிரியில் 9.19 டி.எம்.சி. நீரை திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது என்று தெரிவித்திருக்கிறார்.

காவிரி ஆணையத்தின் தலைவர் மசூத் உசேன், கர்நாடகாவிலிருந்து காவிரியில் விரைவில் தண்ணீர் திறக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார். காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு வெளிவந்த பிறகு நேற்று கர்நாடகா நீர்ப் பாசனத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் எதிர்பார்த்த கோடை மழை இல்லாததாலும், கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் குறைவாக இருப்பதாலும் விவசாயம் மற்றும் குடிநீருக்கு நீர் தேவைப்படுவதாலும் தமிழகத்திற்கு 9.19 டி.எம்.சி. தண்ணீர் எப்படி திறக்க முடியும்? என்று கூறி இருக்கிறார்.

மேலும், கர்நாடகா அணைகளுக்கு தண்ணீர் வரத்தை அடிப்படையாகக் கொண்டு, தண்ணீர் திறக்க வேண்டும் என்றுதான் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது. உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் என்று கூறவில்லை. தென்மேற்கு பருவமழை தொடங்கும் பொழுது கர்நாடக அணைகளுக்கு எதிர்பார்க்கும் நீர் வரத்து இருந்தால் தமிழகத்திற்குத் தண்ணீர் திறக்கப்படும் என்று தெரிவித்து இருக்கிறார்.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை ஏற்று. கர்நாடக அரசு தண்ணீர் திறக்கப்போவதில்லை என்பது இதிலிருந்து உறுதியாகத் தெரிகிறது. கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து மே மாதம் வரையில் தமிழகத்திற்கு 19.5 டி.எம்.சி. நீரை கர்நாடகம் திறந்துவிட்டிருக்க வேண்டும். தமிழ்நாட்டுக்குத் திறக்க வேண்டிய நிலுவைத் தண்ணீரை முழுமையாக அளிக்க வேண்டும் என்று காவிரி ஆணையக் கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் வலியுறுத்தாதது ஏன்?

கர்நாடகம் வழக்கம்போல் அணைகளில் தண்ணீர் இல்லை என்று திரும்பத் திரும்ப பொய் கூறி வருவதை ஏற்க முடியாது. மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால் இந்த ஆண்டும் ஜூன் 12-ந் தேதி குறுவைச் சாகுபடிக்குத் தண்ணீர் திறப்பதற்கு முடியாத சூழல் நிலவுகிறது. இந்நிலையில், குறுவைச் சாகுபடிப் பயிர்களைக் காப்பாற்றவும், குடிநீர் தேவைக்கும் தமிழகத்தின் பங்கான 19.5 டி.எம்.சி. நீரைப் பெறுவதற்கு தமிழக அரசு தேவையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று வைகோ அறிக்கையில் கூறியுள்ளார்.

You'r reading 19.5 டிஎம்சி பாக்கி என்னாச்சு...காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழக அரசு மெத்தனம் ஏன்?- வைகோ கேள்வி Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை