Monday, Nov 29, 2021

திருமாவளவன் - ஒடுக்கப்பட்ட மக்களின் நம்பிக்கை கீற்று...!

Thirumavalavan - The hope of the oppressed people ...!

OBC க்களின் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் பேசி வரும் இவரை வெறுக்கும் பாதிக்கு மேற்பட்டோர் OBCக்களே.விடுதலை சிறுத்தைகள் எனும் இயக்கம், இன்று அனைத்து மக்களையும் உள்ளடக்கிய அரசியல் கட்சியாக உறுப்பெற்று இருக்கிறது என்றால், அதற்கு Inclusive Politics ஐ ஆயுதமாகக் கையில் எடுத்த தொல்காப்பியன் திருமாவளவன் ஒருவரே காரணம். திருமாவை ஒரு சாதித் தலைவராகப் பார்க்கத் தான் நமது கண்கள் பழக்கப்பட்டு இருக்கின்றன. கூர்ந்து நோக்கினால் தான் அவரது அரசியல் சமகாலத்திற்கு ஏற்புடையது என்பது விளங்கும். ஏன் மக்கள் ஒடுக்கப்படுகிறார்கள் ? அதற்குக் காரணம் என்ன ? அதை அரசியல் ஆக்குகிறதா விசிக ? உண்மையிலேயே நாடகக் காதலை விசிக ஆதரிக்கிறதா என்ற பல சர்ச்சையான கேள்விகளுக்கு அவரது ஆளுமையாக்க அரசியல் ஆயிரம் விடைகளைக் கொடுக்கிறது.

ஒரே மொழியைத் திணிக்கும் மத்திய அரசிடம் ஒரே சுடுகாட்டை உருவாக்க முடியுமா ? என்று கேட்ட திருமாவின் குரல்வளைக்குப் பின் ஆயிரம் ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் ஒலிக்கின்றன. மைய நீரோட்டத்திலிருந்து விலக்கி வைக்கப்படும் பல இனங்களை Mainstream இல் கலக்க வைக்க திருமா செய்யும் Inclusive Politics, காலத்தின் கட்டாயம். நேற்று கட்சி ஆரம்பித்த உலக நாயகனும், இன்னும் கட்சியை ஆரம்பிக்கத் தயங்கி நிற்கும் சூப்பர் ஸ்டாரும் முதல்வர் கனவு காண்கையில்,என்றுமே முதல்வராக முடியாது எனத் தெரிந்தும் அரசியல் களத்தில் நிற்கும் நிஜ காலா திருமாவளவன், ஒரு நம்பிக்கை கீற்று.

பா.ரஞ்சித் " ஒரு முறை தலித் சமூக கட்சிகளெல்லாம் ஒன்றிணைந்து தேர்தலைச் சந்திக்க வேண்டும். இது வரையில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றம் சென்ற தனித் தொகுதியில் வெற்றி பெற்ற MP , MLA முதலானோர் பெரிதும் எதுவும் செய்துவிடவில்லை" என்று சொல்லியதற்கு, இது தான் சாக்கு நம் தலைமையின் கீழ் இன்னும் கொஞ்சம் கட்சிகளை ஒருங்கிணைத்து வாக்கு வங்கியை அதிகரிக்கலாம் என நினைக்காமல். இந்த முழுநீள போராட்டமே பொது நீரோட்டத்தில் கலப்பதற்காகத் தான், இதிலும் மாறுபட்டுத் தனித்து நாமே ஒதுங்குவது சமூக நீதி பார்வையில் சரியல்ல எனக் கூறிய திருமாவளவன் சந்தர்ப்பவாத அரசியல்வாதியாக இல்லை என்பதைத் தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறது.

தனக்கு எதிராகத் தமிழ்நாடு முழுவதும் சில சாதி கட்சிகள் வன்மத்தோடு எதிர் நிற்க, வன்முறையைப் பிரயோகித்து மல்லுகட்ட நிற்காமல், " எதிரிகளை ஜனநாயகப்படுத்துங்கள் " எனக் கூறியது இன்று பல தலித் செயற்பாட்டாளர்களுக்கே ஒரு பாடம்.தலித் பேந்தர்ஸ் எனும் அமைப்பை வழிநடத்திய திருமா மீது ஆயிரம் முரண்பாடுகள் இருக்கலாம். ஆனால் தன் கொள்கைகளைத் திருத்திக் கொண்டு அனைத்து பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான அரசியலைப் பேசும் விடுதலை சிறுத்தைகள் திருமாவளவன் மீது எள்ளளவும் முரண்பாடு நடுநிலை அரசியல்வாதிகளுக்கு இருக்காது.

தமிழ்த்தேசிய உணர்வாளர்கள் பல பேர் திருமாவை எதிர்த்து கருத்துக்கள் பதிவதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. ஒரு முறை உங்கள் பார்வையில் தமிழ்தேசியம் என்றால் என்ன என்ற கேள்விக்கு " சாதி ஒழிப்போடு சேர்ந்த தமிழ்த் தேசிய அரசியல் வேண்டும். உன் வீட்டை அடித்து உடைப்பேன், கொழுத்துவேன்.எல்லாம் செய்ஞ்சுட்டு வா தமிழனா ஒன்று சேரலாம்ன்னு கூப்பிடுறது எந்த வகையில் தமிழ்தேசியமாகும் ? " என்ற கேள்வி நியாயமாகவே படுகிறது.

நாட்கள் நகர நகரச் சாதியம் ஒரு ஆண்ட்ராய்டு செயலியைப் போலத் தன்னை தானே உருமாற்றிக் கொண்டு அப்டேட்டட் வெர்சனாக வலம் வருகையில், திருமா அவர்களது அரசியலும் காலத்திற்குத் தகுந்தாற் போல பெரியாரியத்தையும், அம்பேத்கரியத்தையும் உள்வாங்கிக் கொண்டு சாதியத்திற்கு ஈடுகொடுத்து எதிர்த்து நிற்கிறது.என்று திருமா பொதுசனத்திற்கான தலைவராகப் பார்க்கப்படுகிறாரோ, அன்று தான் திருமா பேசி வரும் அரசியல் இங்கு நடுநிலை செய்யும் சில அரசியல்வாதிகளுக்கே விளங்கும். அதன் பிறகே மக்களுக்கு முழுமையாகச் சென்றடையும்.

நிறையப் பேட்டிகளில் சாதிய சமூகம் குறித்து அவர் வருத்தத்தை வெளிப்படுத்துவதைப் பார்க்க முடிகிறது.

" கலங்காதே ராசா
காலம் பொறக்கும்
நள்ளிரவு போன பின் தான்
வெள்ளி முளைக்கும் "

என்ற இளையராசாவின் பாடல் தான் நினைவுகளில் நிழலாடுகிறது .

You'r reading திருமாவளவன் - ஒடுக்கப்பட்ட மக்களின் நம்பிக்கை கீற்று...! Originally posted on The Subeditor Tamil

READ MORE ABOUT :

More Tamilnadu News