Saturday, Oct 16, 2021

குட்கா ஊழலை அமுக்க பாஜக, அதிமுக ரகசிய பேரம்.. ஸ்டாலின் திடுக் குற்றச்சாட்டு..

Dmk suspects the political hand in cbi investication of Gudka case.

by எஸ். எம். கணபதி Aug 26, 2020, 15:39 PM IST

குட்கா ஊழலில் அ.தி.மு.க. அரசுக்கும், மத்திய பா.ஜ.க. அரசுக்கும் உள்ள ரகசியக் கூட்டணியின் முழு உருவமும், நாட்டு மக்களுக்குத் தெரிய வேண்டும் என்றும், இதில் பணபரிவர்த்தனை தொடர்பான சந்தேகங்களை களைய வேண்டுமென்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.


திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை வருமாறு:


40 கோடிக்கு மேல் லஞ்சம் பெற்று, 250 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடத்திய 'குட்கா பேர ஊழலில்' வருமான வரித் துறை இயக்குனர், தலைமைச் செயலாளரிடம் கொடுத்த கோப்புகள் முதலில் காணாமல் போனது. குட்கா வழக்கை விசாரித்த லஞ்ச ஊழல் தடுப்புத்துறை கூடுதல் டி.ஜி.பி. மஞ்சுநாதா திடீரென்று மாற்றப்பட்டார். உயர்நீதிமன்ற ஆணையின்படி விஜிலென்ஸ் ஆணையராக நியமிக்கப்பட்டு குட்கா வழக்கை விசாரித்து வந்த வி.கே.ஜெயக்கொடி 5 மாதங்களில் தூக்கியடிக்கப்பட்டார். சி.பி.ஐ. விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்துக் கடைநிலை ஊழியரான சிவக்குமார் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு போட்டார்.
நவம்பர் 2018-ல் சி.பி.ஐ. விசாரணைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. மக்கள் நல்வாழ்வுத்துறை(!) அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் டி.ஜி.பி.,க்கள் டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ் ஆகியோரது வீடுகள் உள்ளிட்ட 35 இடங்களில் வருமானவரித்துறை ரெய்டு நடந்தது. பிறகு நவம்பர் 2018-ல் ஆறு பேர் மீது மட்டும் முதற்கட்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'சிவக்குமார், செந்தில்முருகன்' ஆகிய இரு தமிழக அரசு ஊழியர்கள் மீது 'வழக்குத் தொடர' நவம்பர் 2018-ல் சி.பி.ஐ. அனுமதி கோரியது. 20 மாதங்கள் கழித்து, அதாவது 2020 ஜூலை மாதம் அ.தி.மு.க. அரசு அனுமதி கொடுத்தது.

ஆனால் அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்ட 'ஊழல் முதலைகள்' மீது குற்றப்பத்திரிக்கை இல்லை; இந்த மோசடிகளை இதுவரை சி.பி.ஐ. கண்டுகொள்ளவும் இல்லை.


உச்சநீதிமன்றமே உத்தரவிட்ட ஒரு சி.பி.ஐ. விசாரணையில் – வருமான வரித்துறையின் கோப்புகளையே அ.தி.மு.க. அரசு காணாமல் போகச் செய்கிறது. வழக்குத் தொடரக் கேட்கும் அனுமதி கொடுக்க திட்டமிட்டு, 20 மாதங்கள் தாமதம் செய்கிறது.


டி.கே.ராஜேந்திரனுக்கு டி.ஜி.பி. பதவி கொடுத்து - பணி நீட்டிப்புக் கொடுத்து - ஒய்வு பெறவும் அனுமதிக்கிறது. அ.தி.மு.க. அரசில் உள்ள கடைநிலை ஊழியர் ஒருவர் உச்சநீதிமன்றத்திலேயே உள்ள மூத்த வழக்கறிஞரை வைத்து வாதாடி, தனக்கு எதிரான சி.பி.ஐ. விசாரணையை ரத்து செய்ய வழக்குப் போட அ.தி.மு.க. அரசு அனுமதிக்கிறது.


இத்தனை 'குட்கா நாடகங்களையும், செயலிழந்த நிலையில் வேடிக்கை பார்த்துக் கொண்டு – 'ஊழல் முதலைகள்' மீது இறுதிக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் - சி.பி.ஐ. 'மயான' அமைதி காக்கிறது. துரும்பு கிடைத்தால்கூட, குதிரையாகப் பாயும் சி.பி.ஐ. 'குட்கா லோடுகள்' போல் தேவையான ஆதாரம் கிடைத்தும் சி.பி.ஐ. ஆமை வேகத்தில்கூட நகர மறுக்கிறது. அதற்குத் தடைபோட்டு வைத்திருப்பது யார்? குட்கா ஊழலில் சம்பந்தப்பட்ட பழனிசாமி அரசும், மத்திய பா.ஜ.க. அரசும் வரிந்து கட்டிக் கொண்டு, அதனால் ஏற்படும் அவமானம் பற்றிக் கவலைப்படாமல், காப்பாற்றுவதில் உள்ள 'அறிவிக்கப்படாத கூட்டணி' என்ன?


அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் டி.ஜி.பி. ராஜேந்திரன் ஆகியோரை நெருங்க விடாமல் சி.பி.ஐ.,யைத் தடுக்கும் உயர்மட்ட சக்தி எது? மக்களின் உயிரைக் குடிக்கும் 'குட்கா ஊழலில்' அ.தி.மு.க. அரசுக்கும் - மத்திய பா.ஜ.க. அரசுக்கும் உள்ள இந்த ரகசியக் கூட்டணியின் முழு உருவமும், நாட்டு மக்களுக்குத் தெரிய வேண்டும்.


பொதுமக்கள் மத்தியில், இதில் உள்ள பங்குப் பரிவர்த்தனை தொடர்பாக நிலவிவரும் பல சந்தேகங்கள் களையப்பட வேண்டும். இல்லாவிட்டால் அந்தச் சந்தேகங்கள் உறுதி செய்யப்பட்ட உண்மைகளாக மக்கள் மனதில் நின்று நிலைத்துவிடும். இது காலத்தின் கட்டாயம்!
இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

You'r reading குட்கா ஊழலை அமுக்க பாஜக, அதிமுக ரகசிய பேரம்.. ஸ்டாலின் திடுக் குற்றச்சாட்டு.. Originally posted on The Subeditor Tamil

READ MORE ABOUT :

More Tamilnadu News