அக்டோபர் மாதம் 15க்கு பின்னர் பள்ளிகளைத் திறக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிற நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 8ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன . (தமிழக கல்வி முறையைப் பின்பற்றித் தான் புதுச்சேரியிலும் கல்வித் துறை இயங்கி வருகிறது. அதே சமயம் தமிழகத்தில் இன்னும் பள்ளிகள் திறப்பது குறித்த முடிவுக்கு வராத நிலையில் புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன)
வாரத்தில் 3 நாட் கள் 9 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கும் அடுத்த 3 நாட்களுக்கு 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கும் மாணவர்களுக்குச் சந்தேகத்தைத் தீர்க்கும் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன .இதற்குப் பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து பள்ளிகளை மூட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர் .
ஆனால் புதுச்சேரி அரசு அதைக் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. நேற்று ஒரு மாணவருக்கும், ஆசிரியருக்கும் கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் பள்ளிகளை மூட வேண்டும் என்ற கோரிக்கை மேலும் வலுத்து வருகிறது.இந்நிலையில் காரைக்காலில் நல வழித் துறை அதிகாரி ஒருவர் ஆடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் காரைக்கால் மாவட்டத்தில் 14 முதல் 17 வயது உடையவர்களுக்கும் தொற்று ஏற்பட்டு உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அதில் 8 பேர் மாணவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதில் 4 மாணவர்கள் காரைக்கால் நகரைச் சேர்ந்தவர்கள், ஒரு மாணவர் நிரவி பகுதியைச் சேர்ந்தவர் என்றும் மற்ற மூன்று மாணவர்கள் வரிச்சிகுடி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் இவர்கள் யாரும் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து ஆன்லைன் மூலம் படிக்க வருவதாகவும் தெரிவித்திருக்கிறார்.
மாணவர்களுக்குத் தொற்று ஏற்பட்டிருப்பதாக மருத்துவத் துறை அதிகாரியே தகவல் தெரிவித்திருப்பது காரைக்கால் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது .
மாணவர்களுக்கும் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் பள்ளிகளை அவசர, அவசரமாகத் திறப்பதற்கான அவசியம் ஏன் ? என்று கேள்வி எழுப்பியுள்ள சிலர் வழக்கமாகச் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஆய்வு நடத்தும் ஆளுநர் கிரண்பேடி கூட தனது இருப்பிடத்தை விட்டு வெளியில் வருவதில்லை. இந்த சூழ்நிலையில் மாணவர்களை மட்டும் பள்ளிக்கு வரவழைப்பது என்ன நியாயம்? இது குறித்து அரசு எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடாதது ஏன் என்றும் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.