வைரமுத்து வியாபாரி வைகோ அறியாமை - பொங்கும் கலாம் ஆலோசகர் பொன்ராஜ்

நியூட்ரினோ ஆராய்ச்சி பற்றி அவதூறு பரப்பும் வைகோ, வைரமுத்து இருவரும் மக்களை தவறாக வழிநடத்தாதீர்கள் என்று அப்துல் கலாம் அவர்களின் ஆலோசகர் பொன்ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Apr 6, 2018, 16:16 PM IST

நியூட்ரினோ ஆராய்ச்சி பற்றி அவதூறு பரப்பும் வைகோ, வைரமுத்து இருவரும் மக்களை தவறாக வழிநடத்தாதீர்கள் என்று அப்துல் கலாம் அவர்களின் ஆலோசகர் பொன்ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அறைகுறையாக தெரிந்து வைத்துக்கொண்டு, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என்ன பெயரில் இன்றைக்கு பல போலி விஞ்ஞானிகள் உங்களை குழப்புகிறார்கள். உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் பதில் வேண்டுமா உங்களுக்கு பதில் அளித்திருக்கிறேன் இந்த காணொளியில். இதுவும் புரியவில்லை என்று சொன்னால் உங்கள் அனைவருக்கும் பொது விவாதத்தில் பதில் அளிக்க தயாராக இருக்கிறேன்.

உயிரைப்பணயம் வைத்து விடுதலைப் புலிகளின் தமிழ்ஈழப் போராட்டத்தை களம் கண்டு, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனோடு ஒரு மாதம் வாழ்ந்து, அவர்களை அறிந்து, உலகம் அறியச்செய்த தலைவன், 1980-90 களில் உங்களைப்பார்த்து மொய்சிலிர்த்த இளைஞர்களில் நானும் ஒருவன். இந்த தொடர்பை வைத்து அரசியல் பண்ணாத ஒரு உன்னத தலைவர் அல்லவா நீங்கள்.

ஸ்டாலினுக்கு எதிராக நீங்கள் வந்துவிடக்கூடாது என்று திமுகவில் பொய்குற்றச்சாட்டு சொல்லி உங்களை வெளியே அனுப்பிய போது, உங்களோடு வந்தவர்கள் எங்கே, உங்களுக்காக தீக்குளித்தவர்கள் ஆன்மா இப்போது ஸ்டாலினை முதல்வர் ஆக்குவேன் என்ற சபதத்தை பார்த்து ஏமாந்துவிட்டோமே என்று எண்ணி அழுகுமே உங்களை அந்த ஆன்மாக்கள் மண்ணிக்குமா?

உணர்ச்சிவசமாய் பேசுவதற்கு இது ஒன்றும் உங்கள் நாலாந்திர கூட்டணி தாவும் அரசியல் அல்ல. நியூட்ரினோவை பொறுத்தவரை புரியாமல் அறியாமையை விதைக்கும் திரு வைகோவால் இன்றைக்கு ஒரு உயிர் போனது தான் மிச்சம்.

நீங்கள் உணர்ச்சி வசப்படும் போது அறிவை அடகுவைத்து விடுகிறீர்கள். போலி சுற்றுச்சூழல் ஆர்வலர்களால், அறை குறை விஞ்ஞானிகளின், அரைகுறை அறிவை கடன் பெற்று உணர்ச்சியை தூண்டி ஆராய்ச்சி திட்டமான நீயிட்ரினோ திட்டத்தை, நாசகார திட்டம் என்று பொய்யுரை பரப்பும் உங்கள் உணர்ச்சிக்கு இனிமேல் அறிவார்ந்த தமிழ் இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் பலியாகமாட்டார்கள்.

எனக்கு பிடித்த தலைவர் என்றாலும் மக்களுக்கு, மாணவர்களுக்கு, இளைஞர்களுக்கு எதிராக, அறிவார்ந்த சிந்தனைக்கு எதிராக உங்கள் அரசியலை திருப்பும் போது உங்களை எதிர்த்து தான் ஆக வேண்டும்.

கவிப்பேரரசு வைரமுத்து அவர்களே, அப்துல் கலாம் அவர்களை அழைத்து அவரை புகழ்ந்து பாராட்டி பேசுவது, அவர் மறைந்த பின்பு அவரது கருத்துக்களுக்கு எதிராக பேசுவதற்கு பெயர் கொள்கையற்ற நிலைப்பாடக, சூழலுக்கேற்ப தன்நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளும் சாதாரண மனிதர்களை போல மாறிவிட்டீர்களே என்று நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது. நியூட்ரினோக்கள் பற்றி டாக்டர் அப்துல் கலாம் சொன்ன கருத்துக்களை கூட படிக்காமல், நீயுட்ரினோ பற்றிய அனைத்து சந்தேகங்களுக்கும் அவர் அளித்த பதிலை கூட படிக்காமல், அவர் விளக்கிய அறிவார்ந்த பதிலை கூட படிக்காமல், தேனிக்குள் வந்து நீயூட்ரினோ பற்றி அதே சந்தேகங்களை கவிதை நடையில் அள்ளி தெளித்து சென்று இருக்கிறீர்கள்.

நான் மதிக்கும் ஒரு கவிஞரின் அறிவியல் அறியாமையை பற்றி நினைக்கும் போது இந்த தமிழ் சமூகம் எப்படிப்பட்டவர்களால் வழிநடத்தப்படுகிறது என்று பார்க்கும் போது, தங்கள் குழந்தைகளை படிக்க வைத்து அறிவார்ந்தவர்களாக உருவாக்க நினைக்கும் பெற்றோர்களை நினைத்து பரிதாபமாக இருக்கிறது.

கவிதை நடையில் விஞ்ஞானத்தை பேசுகிறேன் பேர்வழி என்று 4 புத்தகத்தை படித்து விட்டு உங்கள் அறியாமையை விதைப்பதற்கு இது ஒன்றும் சினிமா பாட்டு அல்ல. பேச போகும் இடத்திற்கேற்ப பணத்திற்கேற்ப, நாலு புத்தகத்தை படித்து தமிழை, தன் சினிமா புகழை வியாபாரம் செய்பவர்களுக்கு பெயர் வியாபாரி என்று பெயர்.

இதில் நீங்கள் எந்த வகையை சேர்ந்தவர் என்பதை உங்கள் முடிவிற்கே விட்டு விடுகிறேன். உண்மையிலே நீங்கள் நீயுட்ரினோ பற்றி அறிய வேண்டும் என்றால் உங்கள் சந்தேகங்களுக்கு பதில் அளிக்க உங்களை நேரில் சந்தித்து விளக்க தயாராக இருக்கிறேன்.

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என்ற பெயரில், படித்த மாணவர்களுக்கு பயன்படும் ஆராய்ச்சி திட்டமான நீயுட்ரினோ திட்டத்தை எதிர்த்து, மக்கள் மத்தியில் தவறான, பொய்யான எண்ணத்தை பரப்பும் போலி சுற்று சூழல் ஆர்வலர்களுக்கு கிடைத்தவர் என் மனதில் நான் போற்றும் ஒரு நல்ல தலைவர் திரு வைகோ அவர்கள். இவர்களது பொய்யான கருத்துக்களுக்கு பலியாகி சட்டப்போராட்டம் நடத்திக்கொண்டு, நடை பயணம் போய்கோண்டு இருக்கிறார், இது மட்டுமல்ல அறியாமைக்கு ஒரு உயிர் பலியாகி இருக்கிறது.

இதைப்பற்றி டாக்டர் அப்துல்கலாமும், நானும் தினமலர் செய்தித்தாளில் இந்த போலி சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் அனைத்து கேள்விகளுக்கும் விடை அளித்திருக்கிறோம். நியூட்ரினோ திட்டத்தை எதிர்ப்பவர்களை நேருக்கு நேர் தொலைக்காட்சி விவாத்தத்திற்கு வந்து என்னோடு விவாதிக்க தயாரா என்று அறைகூவல் விடுகிறேன், இது கவிஞர் வைரமுத்துவிற்கும் பொருந்தும், போலி சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கும் பொருந்தும்.

வெறும் புத்தகம் படித்து விட்டு பேசுபவர்கள், சினிமா வசனம் பேசுபவர்கள், பாட்டு எழுதுபவர்கள், அடுத்தவர் எழுதி கொடுத்ததை வைத்து அரசியல் செய்வோர், அறிவியலுக்கு எதிராக சவால் விடும் சினிமா காரர்கள் அனைவரும், அறை குறை அறிவோடு அரசின் நல்ல திட்டங்களை எதிர்ப்பவர்கள், அனைவரும் அறிவியல் ஆராய்ச்சியின் பயனால் விளைந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்திக்கொண்டு, நீயூட்ரினோ திட்டத்தை எதிர்ப்பது, கூடம்குளம் அணுமின்சார திட்டத்தை எதிர்ப்பு, நதி நீர் இணைப்பு திட்டத்திற்கு எதிர்ப்பு என்பதை வழக்கமாக கொண்டு பொய்யை பரப்பிக்கோண்டிருக்கிறார்கள். இவர்கள் தான் படித்த மாணவர்களுக்கு, இளைஞர்கள், பொதுமக்களுக்கு எதிரிகள். ஆனால் அவர்கள் தான் இன்றைக்கு ஊடகத்தால் ஊதிப்பெரிதாக்கப்படுகிறார்கள்.

என்னைப் பொறுத்தவரை நான் தெளிவாக இருக்கிறேன். ஹைடிரோகார்பன், மீத்தேன் திட்டத்தை நெடுவாசல், கதிராமங்களத்தில், டெல்டா மாவட்டத்தில் செயல்படுத்துவதை எதிர்க்கிறேன், ஆழ்கடல், பாலைவனம், தரிசு நிலங்களில் எடுப்பதை ஆதரிக்கிறேன். இதற்கு தீர்வை கொடுத்துஇருக்கிறேன்.

நீட் தேர்வை எதிர்க்கிறேன் - அதற்கு தீர்வை கொடுத்திருக்கிறேன். மத்திய அரசின் காவேரி துரோகத்தை எதிர்க்கிறேன் அதற்கு தீர்வும் சொல்லியிருக்கிறேன். கெயில் திட்ட குழாய்கள் விவசாய நிலத்தில் பதிப்பை எதிர்க்கிறேன். அணுமின்சார திட்டத்தை ஆதரிக்கிறேன். நியூட்ரினோ ஆராய்ச்சி திட்டத்தை ஆதரிக்கிறேன்.

எதை ஆதரிக்கிறேன், எதை எதிர்க்கிறேன் என்பதில் அறிவார்ந்த கொள்கை நிலைப்பாடு தான் அறிவார்ந்த அரசியலுக்கு முக்கியம். ஆளும் கட்சி என்றால் ஒரு நிலைப்பாடும், எதிர்கட்சி என்றால் ஒரு நிலைப்பாடும் என்றால், இதற்குப்பெயர் தரம் தாழ்ந்த அரசியல்.

அரசியலில் உங்களைப்போன்றவர்கள் சரியான முடிவெடுக்காமல் ஒவ்வொரு முறையும் தோற்பது தமிழ் நாட்டிற்கு நல்லதல்ல என்று திரு வை.கோ அவர்களை கேட்டுக்கொள்கிறேன். திரு வைகோ அவர்களை பாராளுமன்றத்திற்கு சிவகாசி மக்கள் தோர்ந்தடுக்காததின் பலனை பட்டாசு தொழிலை ஒழிக்க உறுதுணையாக இருக்கும் மத்திய அரசை பாராளுமன்றத்தில் எதிர்க்க கூட வழியில்லாமல் போனது. அவரது கொள்கையற்ற அரசியல் நிலைப்பாடு தான் அவருக்கு அந்த வாய்ப்பை அவருக்கு வழங்கவில்லை.

திரு வைகோ அவர்கள் தவறான புரிதலோடு நடத்தப்படும் நடை பயணத்தை நிறுத்த வேண்டும் மீண்டும் உயிர் பலி ஆவதை தடுக்க வேண்டும். தேவையில்லாத நடை பயணத்தை தவிர்த்து காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க, உங்கள் குரலை கொடுங்கள், நீயூட்ரினோ பற்றி உங்கள் அனைத்து சந்தேகங்களுக்கும் உங்களை சந்தித்து விடை அளிக்க தயாராக இருக்கிறேன்.

தமிழ்நாட்டை கொல்லும் ஆலைகள் 189 தொழிற்சாலைகள்தான், நீயுட்ரினோ அல்ல. அதிபயங்கர கழிவுகளை நிலத்தில், நீரில், காற்றில் கலக்கும் 189 தொழிற்சாலைகள், இதில் ஒன்று கூட Zero Liquid Effluent Discharge plant கிடையாது.

Zero Liquid Effluent Discharge plant இருந்த ஒரு கம்பெனியை அதிமுக அரசு 2011ல் லட்சத்திற்காக மூடி இன்றைக்கு அந்த கம்பெனி ஏலத்திற்கு வந்துவிட்டது. ZLED plant இல்லையென்றால் தமிழ்நாட்டின் நிலத்திற்கும், நீறுக்கும், காற்றுக்கும் ஆபத்து; ஆனால் அமைச்சர்களுக்கு அது பணம் காய்க்கும் மரம். இதனால்தான் 60 வகையான அதிக மாசை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில், அதிபயங்கர கழிவுகளை கலக்கும் 17 வகையான தொழிற்சாலைகளில் காப்பர் தொழிற்சாலையும், சாராய தொழிற்சாலைகளும் அடங்கும். இந்த வகையில் 189 தொழிற்சாலைகள் அடங்கும்.

இன்றைக்கு ஸ்டெர்லைட்க்கு எதிராக திரு வைகோ அவர்கள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளை தவிர்த்து, வேறு டிவி வெளிச்சத்தில் வரும் எந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சட்டப்போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். இந்த போலி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இந்த 189 நாசகார ஆலைகளை மாசு கலக்காமல் செய்ய எடுத்த நடவடிக்கை என்ன?

குறைந்த பட்சம் இந்த அதிபயங்கர மாசு கலக்கும் 20 சாராய ஆலைகளை மூட எடுத்த நடவடிக்கை என்ன? இதுவரை ஒன்றும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading வைரமுத்து வியாபாரி வைகோ அறியாமை - பொங்கும் கலாம் ஆலோசகர் பொன்ராஜ் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை