Saturday, Oct 16, 2021

சசிகலா விடுதலையால் அதிமுகவில் சலசலப்பு.. மீண்டும் கட்சியில் பிளவு?

by எஸ். எம். கணபதி Jan 15, 2021, 14:41 PM IST

சசிகலா வரும் 27ம் தேதி விடுதலையாக உள்ள நிலையில், அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் மீண்டும் பிளவு ஏற்படும் சூழல் தெரிகிறது. வருமானத்திற்கு அதிகமாக ஜெயலலிதா சொத்து குவித்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் 2வது குற்றவாளியாகத் தண்டனை பெற்ற அவரது உடன்பிறவாது சகோதரி சசிகலா, தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கிறார். அவர் வரும் 27ம் தேதி விடுதலை செய்யப்பட உள்ளார். இதையடுத்து, அதிமுகவுக்குள் சலசலப்பு ஏற்படத் தொடங்கியுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக் குழுவில் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பேசும் போது, சசிகலா வெளியே வந்தாலும் அவரால் கட்சியில் ஒன்றும் ஆகப் போவதில்லை. அவருக்கே ஆயிரத்தெட்டு பிரச்சனை இருக்கிறது என்று குறிப்பிட்டார்.ஆனால், அடுத்த 2 நாட்களில் முன்னாள் அமைச்சரும், கட்சியின் அமைப்புச் செயலாளருமான கோகுல இந்திரா, சென்னையில் ஒரு ஆர்பாட்டம் நடத்தினார். அப்போது அவர், சசிகலாவை அம்மாவுடன் சேர்ந்து தவவாழ்க்கை வாழ்ந்தவர் என்று புகழ்ந்தார். இந்த கருத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

அவர் கூறுகையில், அதிமுகவில் கோகுல இந்திரா உள்பட யாராக இருந்தாலும், சசிகலாவுக்கு ஜால்ரா அடிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஆற்றில் ஒரு காலும் சேற்றில் ஒரு காலும் வைப்பது நல்லதல்ல. சசிகலாவை ஒருபோதும் கட்சி ஏற்றுக் கொள்ளாது என்றார்.அதே போல், அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியும் வழக்கம் போல் சசிகலாவுக்கு ஆதரவாக மீண்டும் பேசியுள்ளார். ஒரு வார பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில், எங்களுக்கும், டி.டி.வி.தினகரனுக்கும் இடையே பங்காளிச் சண்டைதான் நடக்கிறது. சின்னம்மா(சசிகலா) வெளியே வந்ததும், எல்லோருமே ஒன்றிணைய வாய்ப்பு உள்ளது. சசிகலா அ.தி.மு.க.வை பலப்படுத்தும் முடிவைத்தான் எடுப்பார் என்று தெரிவித்திருந்தார்.இதற்கும் அமைச்சர் ஜெயக்குமார் காட்டமாகப் பதில் கொடுத்துள்ளார். அவர் கூறுகையில், ராஜேந்திர பாலாஜி தெளிவில்லாமல் இருக்கிறார்.

அதிமுகவுக்கும், டி.டி.வி,க்கும் இடையே அண்ணன் தம்பி பிரச்சினை என்று எப்படி சொல்லலாம்? இரட்டை இலை சின்னத்தை முடக்க முயன்ற தினகரனுடன் எந்த உறவும் இல்லை என்றார்.ஆனாலும், அதிமுகவில் ஆங்காங்கே சசிகலா ஆதரவு குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளது. அது மட்டுமில்லாமல் டி.டி.வி. தினகரன் சில மாதங்களுக்கு முன்பு தனி விமானத்தில் திடீர் பயணமாக டெல்லி சென்று திரும்பியிருந்தார். அது முதல் அவர் பாஜகவை விமர்சிக்கவே இ்ல்லை. பாஜகவின் மூத்த தலைவர் ஒருவரைத் தினகரன் சந்தித்துள்ளதாகவும், விரைவில் அதிமுக - அமமுக இணையப் போகிறது என்றும் பேச்சு அடிபட்டது.இந்த நிலையில், சசிகலாவுக்கு எதிராக முதன்முதலில் ஓ.பன்னீர்செல்வத்தைப் போராடத் தூண்டி விட்ட துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி நேற்று(ஜன.14) துக்ளக் விழாவில் பேசுகையில், சசிகலாவையும் சேர்த்து அதிமுகவை பலப்படுத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

எனவே, பாஜக ஆதரவுடன் சசிகலா மற்றும் டி.டி.வி. தரப்பினர் அதிமுகவில் மீண்டும் இணைய வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. அதே சமயம், கே.பி.முனுசாமி, அமைச்சர்கள் ஜெயக்குமார், வீரமணி, தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோர் சசிகலா குடும்பத்தினருக்கு எதிராக உள்ளனர். மேலும், தற்போது ஓ.பி.எஸ். அணியினர் சசிகலாவுக்கு ஆதரவாகவும், எடப்பாடி பழனிசாமி அணியினர் சசிகலாவுக்கு எதிராகவும் திரும்பி விட்டதாகவும் பேசப்படுகிறது. எனவே, சசிகலா திரும்பி வந்ததும் மீண்டும் கட்சியில் பிளவு ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது.

You'r reading சசிகலா விடுதலையால் அதிமுகவில் சலசலப்பு.. மீண்டும் கட்சியில் பிளவு? Originally posted on The Subeditor Tamil

READ MORE ABOUT :

More Tamilnadu News