Thursday, May 26, 2022

மம்தாவுக்கு ஜெய் ஸ்ரீராம்.. மோடிக்கு பாரத் மாதா கீ ஜே.. கொல்கத்தாவில் பரபரப்பு..

by எஸ். எம். கணபதி Jan 24, 2021, 09:17 AM IST

பிரதமர் மோடி முன்னிலையில் மம்தா பானர்ஜியை பேச விடாமல், பாஜகவினர் கோஷமிட்டதால் அவர் பேசாமல் மேடையை விட்டு அகன்றார். மேற்கு வங்கத்தில் வரும் மே மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் திரிணாமுல் கட்சி மக்களிடம் கடும் அதிருப்தியை சந்தித்து வருகிறது. அம்மாநிலத்தில் முக்கிய எதிர்க்கட்சியாக பாஜக வளர்ந்துள்ளது. பாஜக- திரிணாமுல் கட்சிகளிடையே மோதல் காரணமாக வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. திரிணாமுல் தலைவரும் முதல்வருமான மம்தா பானர்ஜியை பிரதமர் மோடி, அமித்ஷா உள்பட பாஜகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மம்தாவும் மிகக் கடுமையாக பிரதமரை விமர்சித்து வருகிறார். இந்நிலையில், தேர்தல் நெருங்கி வருவதால் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 124வது ஆண்டு விழாவை பிரம்மாண்டமாக கொண்டாட மத்திய பாஜக அரசு முடிவெடுத்தது.

இதன்படி, கொல்கத்தாவில் ஜன.23ம் தேதி மத்திய அரசு விழாவாக நடத்தப்பட்டது. இதில் பிரதமர் மோடி பங்கேற்றார். அரசு விழா என்பதால் முதல்வர் மம்தாவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. பிரதமர் வருவதால் அவர் புறக்கணிப்பார். அதனால் அவர் நேதாஜியை அவமதித்து விட்டார் என்று பேசலாம் என்று பாஜகவினர் கருதினர். ஆனால், பிரதமர் மோடி கலந்து கொண்ட அந்த விழாவில் முதல்வர் மம்தா பானர்ஜியும் கலந்து கொண்டார். பிரதமர் பேசுவதற்கு முன்பாக முதல்வரை பேச அழைத்தனர். அவர் பேச்சை தொடங்கும் போது, கூட்டத்தில் அமர்ந்திருந்த பாஜகவினர், ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிட்டனர்.(ஏற்கனவே மம்தா செல்லுமிடங்களில் அவரை எரிச்சலூட்டுவதற்காக பாஜகவினர் கூட்டமாக கூடி, இப்படி கோஷமிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.) பாஜகவினரின் இந்த அசிங்கமான செயலை பிரதமர் கண்டிக்கவும் இல்லை. கண்டுகொள்ளவும் இல்லை. அப்போது மைக்கைப் பிடித்து பேசிய மம்தா பானர்ஜி, என்னை அவமானப்படுத்தாதீர்கள். இது அரசியல் நிகழ்ச்சி அல்ல. அரசு விழா.

இப்படி அரசு விழாவுக்கு ஒருவரை அழைத்து விட்டு அவரை அவமரியாதை செய்யலாமா? இதுவே தெரியவில்லையா? என்று கோபமாக கேட்டு, நேதாஜி விழாவை நடத்தியதற்கு பிரதமருக்கும், மத்திய கலாசாரத் துறைக்கும் நன்றி, ஜெய்ஹிந்த் என்று உரையாற்றாமல் விருட்டென்று மேடையை விட்டு இறங்கினார். பிரதமர் மவுனமாக அதைப் பார்த்து கொண்டிருந்தார். இதன்பிறகு, பிரதமர் மோடி பேசினார். அப்போது கூட்டத்தினர் யாரும், ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிடவில்லை. மாறாக, பாரத் மாதாகி ஜே என்று கோஷமிட்டனர். இந்த சம்பவம் குறித்து பாஜக பொதுச் செயலாளர் விஜய் வர்கியா கூறுகையில், மம்தா பானர்ஜிக்கு ஏன் கோபம் வருகிறது. அவர் விழாவில் அப்படி நடந்து கொண்டிருக்கக் கூடாது. அவரை பாராட்டும் விதமாகவே அந்த கோஷம் எழுப்பப்பட்டது. அதில் ஒன்றும் தவறு இல்லை என்றார். திரிணாமுல் எம்.பி. டெரிக் பிரையன், மரியாதையைப் பற்றி நீங்கள்(பாஜக) சொல்லித் தரவில்லை. மம்தா நாகரீகமாக தனது எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார் என்று குறிப்பிட்டு, அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். மேற்கு வங்கத்தில் திரிணாமுல் - பாஜக இடையே மோதல் போக்கு மேலும் மேலும் அதிகரித்து வருகிறது.

You'r reading மம்தாவுக்கு ஜெய் ஸ்ரீராம்.. மோடிக்கு பாரத் மாதா கீ ஜே.. கொல்கத்தாவில் பரபரப்பு.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News