ஒன்றுபட்ட அதிமுக வேண்டும் என்று கோரிக்கை வைத்து சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் உள்ளிட்டோர் எவ்வளவோ பேசிப்பார்த்தும் பயன் கிடைக்கவில்லை. இதனால், எடப்பாடியை வெளியேற்றிவிட்டு செங்கோட்டையனை உட்கார வைக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. ஒன்றுபட்ட அதிமுகதான் தங்களுக்கு சாதகமானது என்பதால் இதன் பின்னணியில் பாஜக இருக்கிறது என்று குற்றம் சாட்டுகின்றனர் எடப்பாடி தரப்பினர்.
கட்சிக்காக ஆரம்பத்தில் இருந்து உழைத்தவர்களை வெளியேற்றிவிட்டு இடையில் வந்தவருக்கு ஏன் இத்தனை பிடிவாதம்? என்று எடப்பாடிக்கு எதிராக அணி திரள்கின்றனர் அவரால் ஓரங்கட்டப்பட்டவர்கள். வரும் 24ம் தேதி அன்று ஜெயலலிதாவின் பிறந்த நாளின்போது சசிகலா, ஓபிஎஸ், இபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் இணைந்திருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால், செங்கோட்டையனை அதிமுக பொதுச்செயலாளர் ஆக்கி விட்டு அதிமுக சின்னம் அவருக்கு கிடைக்கும்படி செய்யுங்கள் என்று உத்தரவு போட்டிருக்கிறது பாஜக தலைமை என்கிறார்கள் எடப்பாடி தரப்பினர்.
இனிமேலும் எடப்பாடி மனம் மாறுவார் என்கிற நம்பிக்கை இல்லாததால் செங்கோட்டையன் அதிமுகவுக்கு தலைமையேற்பதற்கான வேலைகளைச் செய்து வருகிறார்கள் சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தரப்பு .
இதனால்தான், ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனை பற்றி கேள்வி கேட்கும் போதெல்லாம், துரோகி, அவர்களுக்கும் அதிமுகவுக்கும் சம்பந்தமில்லை என்று கடுமையாக பேசி வந்த செல்லூர் ராஜு, அதிமுகவில் தலைமை மாற்றமா? என்ற கேள்விக்கு, அண்ணன் ஓபிஎஸ், டிடிவி சார்.. என்று என்று பதில் சொல்கிறார். செல்லூர் ராஜூவின் இந்த தலைகீழ் மாற்றம் ஓபிஎஸ் வட்டாரத்தில் பெரிய நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. செங்கோட்டையனை அதிமுக பொதுச்செயலாளர் ஆக்குவதற்காக எடப்பாடிக்கு எதிரான எம்.எல்.ஏக்களை விலை பேச தொடங்கியிருக்கிறார்கள். இதற்காக, பணத்தையும் வாரி இறைத்துள்ளதாக தகவல் உள்ளது.
அதிமுகவை ஒருங்கிணைக்கும் பொறுப்பினை முதலில் எஸ்.பி.வேலுமணியிடம் தான் கொடுத்திருக்கிறது பாஜக தலைமை. எஸ். பி வேலுமணியும் முயற்சி எடுத்ததாக தெரிகிறது. ஆனால், எடப்பாடி கொஞ்சம் கூட இறங்கி வராததால்தான் தற்போது செங்கோட்டையனை முன்னிறுத்துவதாகவும் தகவல் உள்ளது.














