தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் சமீபத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மிகப்பெரிய பிரச்சனை மாவட்ட நிர்வாகத்தை மாற்றி அமைக்க தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப் பெருந்தகை எடுத்த முடிவுதான். இப்போது வரை, ஏதாவது ஒரு மூத்த தலைவர்களுடைய அனுதாபிகளாக தங்களை காட்டிக் கொண்டு அவர்களின் பரிந்துரையின் பெயரில் மாவட்ட பொறுப்புகளுக்கும் மாநில பொறுப்புகளுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் நியமிக்கப்பட்டு வந்தனர்.
அதற்கெல்லாம் இப்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக செல்வப் பெருந்தகை பொறுப்பேற்ற பின் அடிமட்ட தொண்டனும் மாவட்ட தலைமை பதவிக்கு விண்ணப்பிக்கலாம் . அதுவும் யாருடைய பரிந்துரை இல்லாமல் தன்னிச்சையாக இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து விட முடியும் என்ற நிலையை உருவாக்கினார்.
இதுநாள் வரை கட்சியின் வளர்ச்சியில் அக்கறை இல்லாமல் பதவி சுகத்தை அனுபவித்து வந்த பலருக்கு இந்த அறிவிப்பு வயிற்றில் புளியை கரைப்பது போல் அமைந்துள்ளது. இவர்கள் பல ஆண்டுகளாக மாநில மாவட்ட, பொறுப்புகளில் இருந்து தங்கள் வருவாயை மட்டும் பெருக்கி கொண்டிருந்தனர். வேறு யாரும் உள்ளே வந்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தனர். ஆனால் , செல்வப் பெருந்தகையின் புதிய இன்னோவேடிவான செயல் கட்சியின் பழந் தலைகளுக்கு பெருத்த அடியாக அமைந்து விட்டது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி புதிய ரத்தம் பாய்ச்சினால் மட்டுமே கட்சி வளர்ச்சி அடையும் என்ற நல்ல எண்ணத்துடன் செல்வ பெருந்தகை இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஆனால், இதை தடுக்கும் விதமாக தமிழகத்திலிருந்து டெல்லிக்கு சென்று பலர் செல்வபெருந்தகைக்கு எதிராக காய் நகர்த்தி வருகின்றனர்.
தமிழகத்திலேயே மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக கருதப்படும் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக் தாகூர் முதல் டெல்லியில் உள்ள முன்னாள் இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரை செல்வ பெருந்தகைக்கு , இடைஞ்சல் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளார். ஆனால் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் ஒவ்வொருவரும் செல்வப் பெருந்தகையின் ஜனநாய வழியிலான நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்து கொண்டுள்ளனர்.
செல்வப் பெருந்தகை எப்பாடுபட்டாவது தான் தலைமை பதவியில் இருக்கும் வரை காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் கொடுத்து விட போராடி கொண்டுதான் இருக்கிறார். ஆனால், அதை தடுக்கவும் ஒரு கும்பல் காங்கிரஸ் கட்சிக்குள் செயல்பட்டு கொண்டுதான் இருக்கிறது.