சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் ஏ.எஸ். சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது -
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் கனிமவளக் கொள்ளை நடைபெறுவதாக அளித்த புகாரை அடுத்து சமூக ஆர்வலர் ஜகபர் அலி கடந்த ஜனவரி 17ந்தேதி கொல்லப்பட்டார். மயிலாடுதுறையில் கள்ளச்சாராய வியாபாரத்தை தட்டிகேட்ட ஹரிஷ் மற்றும் ஹரிசக்தி ஆகிய இரு இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர். கடந்த 2022ல் கரூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜெகநாதன் கனிமவளக் கொள்ளைக்கு எதிராக போராடிய நிலையில் வாகனம் ஏற்றி கொலை செய்யப்பட்டார். 2023 ல் மணல் கொள்ளையை தடுக்க முயன்ற தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அதிகாரி லூர்து பிரான்சிஸ் மணல் கொள்ளையர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இந்த பட்டியல் எழுத தொடங்கினால் சிந்துபாத் கதை போலவே நீளும். மணல் கொள்ளை, கனிமவளக் கொள்ளை, கள்ளச்சாராய விற்பனை, போதைப்பொருட்கள் விற்பனை, அரசு நிலம் ஆக்கிரமிப்பு, நீர்நிலைகள் கபளீகரம், ஊழல் முறைகேடுகள் இவைகளுக்கு எதிராக போராடி வரும் சமூக ஆர்வலர்கள் உயிருக்கு எந்த வகையிலும் தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை என்பதையே தொடரும் சம்பவங்கள் துல்லியமாக காட்டி வருகிறது.
கனிமவளக் கொள்ளைக்கு எதிராக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க தவறியதின் விளைவாகவே சமூக விரோத கும்பல்கள் மூலம் சமூக ஆர்வலர்கள் உயிருக்கு எவ்வித உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது. மதுரை மாவட்ட கிரானைட் குவாரிகளில் நடைபெற்ற 16,000 கோடி ரூபாய் ஊழல் வெளிச்சத்திற்கு வந்ததால் இம்முறைகேட்டை அறியமுடிந்தது. இதுபோலவே அனுமதிக்கப்பட்ட அளவை மீறி இயற்கை வளம் சுரண்டப்படுவது தொடர்கிறது.
இயற்கை வளங்கள் கட்டுப்பாடின்றி சுரண்டப்பட்டு வரும் நிலையில் இதனால் சுற்றுச்சூழல் சீர்கெடுவதோடு, நிலச்சரிவு, தொடர் வறட்சி, நிலநடுக்கம், வெள்ளப்பெருக்கு, விவசாயம் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு தாக்குதல்களை எதிர்கொள்ள நேரிடும். ஆனால் இதனை பற்றி சிந்திக்காமல் பணவேட்கையில் இயற்கையினை சூறையாடும் கும்பலுக்கு இடையூறாக இருப்பவர்களை இவர்கள் எளிதில் வேட்டையாடி வருகின்றனர்.
சட்டவிரோத கும்பல்களால் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத சூழலில், காவலர்களின் கைது நடவடிக்கைக்கு மத்தியில், அரசு அதிகாரிகளின் நிராகரிப்புகளுக்கு மத்தியில், அதிகார வர்க்கத்தினரின் மிரட்டல்களுக்கு நடுவில் உண்மையாக மண்ணிற்காக, மக்களுக்காக போராடி வரும் சமூக ஆர்வலர்களுக்கு எந்த வகையிலும் பாதுகாப்பு அற்ற சூழலே உள்ளது. எனவே வரும் சட்டமன்ற கூட்டத்தொடரின் போது சமூக ஆர்வலர்கள் பாதுகாப்பிற்கு தமிழக அரசு தனிச்சட்டம் இயற்றிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.