
அமலாக்கத்துறை வளையத்தில் தனூஷ், சிவகார்த்திகேயன், சிம்பு மற்றும் இரண்டு சினிமா பி.ஆர்.ஓ'கள் வந்துள்ளதாகவும் விரைவில் அவர்களுக்கு சம்மன் அனுப்ப அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
திடீர் திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கர் வீட்டில் அண்மையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அமலாக்கத்துறையிடம் சிக்கிய டைரியில் யார்.. யாருக்கு.. எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பான விபரங்கள் பென்சில் மூலம் எழுதி வைக்கப்பட்டிருந்ததாக சொல்லப்படுகிறது. ஆகாஷின் டான் பிச்சர்ஸ் நிறுவனம் இட்லி கடை படத்திற்காக தனூஷுக்கு ரொக்கமாக 40கோடி ரூபாய் செட்டில் செய்ததற்கான ஆவணம் அமலாக்கதுறையிடம் சிக்கியதாக தகவல்.
பராசக்தி படத்தில் நடிப்பதற்காக சிவகார்த்திகேயனுக்கு முன் பணமாக 25 கோடியும், சிம்பு நடிக்கும் 49 ஆவது படத்திற்கான சம்பள முன் பணமாக 15 கோடியும் கொடுத்ததற்கான ஆவணங்கள் அமலாக்கத்துறையிடம் கிடைத்ததாக சொல்லப்படுகிறது. மேலும் டான் பிச்சர்ஸ் தயாரிக்கும் படங்களுக்கு குணச்சித்திர நடிகர்கள் மற்றும் துணை நடிகர், நடிகைகள் தேர்வு செய்ய இரண்டு சினிமா பி.ஆர்.ஓ'கள் மூலம் கோடிகளில் பணம் வழங்கப்பட்டுள்ளதற்கான விபரங்களும் அமலாக்கத்துறையிடம் சிக்கிய டைரியில் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் தெலுங்கு தயாரிப்பாளர் ஏசியன் சுனில் ஆகாஷின் தயாரிப்பு நிறுவன படங்களை தெலுங்கில் வினியோகம் செய்ய ஒப்பந்தமிட்டுள்ள ஆவணங்களும் அமலாக்கத்துறையிடம் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.