மன்னிப்பு கேட்க மனமில்லாதவர், படத்தை திரையிட ஏன் அனுமதி கேட்கிறார்? - கன்னட மொழி விவகாரத்தில் கமல்ஹாசனுக்கு நீதிபதி கடும் கண்டனம்

court-blasts-actor-kamal-over-kannada-remark-row

தக் லைப் என்ற பெயரில் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம் ஜூன் 5ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், சர்ச்சையை சந்தித்துள்ளது. இந்த படத்தின் புரமோஷன் விழாவில் கமல்ஹாசன் தமிழில் இருந்து கன்னடம் பிறந்தது என்று பேசினார். இதையடுத்து, கர்நாடகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.மன்னிப்பு கேட்க வேண்டுமென கர்நாடகாவில் பல அமைப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.

ஆனால், கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க மறுத்து விட்டார். தொடர்ந்து , கர்நாடகத்தில் தக் லைப் படம் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தக் லைப் படத்தின் இணை தயாரிப்பாளரான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தக்லைப் படம் வெளியிட பாதுகாப்பு அளிக்க வேண்டுமென மனு தாக்கல் செய்தது.

இந்த வழக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நீதிபதி நாகபிரசன்னா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி கமல்ஹாசனை காட்டமாக விமர்சித்துள்ளார். அவர் கூறியதாவது, 'மக்களின் சென்டிமென்டை காயப்படுத்தி விட்டு மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று கூறுவதை ஏற்க முடியாது. நிலம், நீர், மொழியை வைத்து மக்களை புண் படுத்த கூடாது. கர்நாடக மக்களை புண்படுத்த உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது. நீங்கள் ஒரு வரலாற்று ஆய்வாளரா? அல்லது மொழி ஆய்வாளரா? . எதன் அடிப்படையில் நீங்கள் அப்படி பேசினீர்கள். மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறும் நீங்கள் , உங்கள் படத்தை மட்டும் கர்நாடகத்தில் திரையிட அனுமதி கேட்பது ஏன்? .

கருத்து சுதந்திரத்தின் பெயரில் மற்றொரு இன மக்களை காயப்படுத்த முடியாது. நீங்கள் மன்னிப்பு கேளுங்கள். உங்கள் படத்தை இங்கு திரையிடுங்கள். கோடிகளை சம்பாதியுங்கள். ஒரு மன்னிப்பு பிரச்னையை தீர்த்து விடும். ஆனால், உங்களின் ஆட்டிடியூட் ஏற்றுக் கொள்ள முடியாதது. பல ஆண்டுகளுக்கு முன்பு இது போன்று பேசிய ராஜகேபாலாச்சாரியா கூட மன்னிப்பு கேட்டுள்ளார். எனவே, மன்னிப்பு கேட்பது குறித்து கமல்ஹாசன் யோசிக்க வேண்டும்' என்று தெரிவித்தார்.

அதோடு, வழக்கு விசாரணையை மதியம் 2.30 மணிக்கு தள்ளி வைத்தார்.

நீதிமன்றத்தின் கருத்து குறித்து கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார் கூறுகையில், கமல்ஹாசன் நீதிமன்றத்தின் அறிவுரையை ஏற்றுக் கொள்வார். எந்த விஷயத்திலும் பிடிவாதம் பிடிக்க கூடாது என்று தெரிவித்துள்ளார்.