தமிழக அரசில் 4 லட்சம் காலிப்பணி இடங்கள் நிரப்பப்படாததால் பணிகள் தேக்கம். சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

Work-is-stalled-in-Tamil-Nadu-government-as-4-lakh-vacancies-remain-unfilled

சமூக பொதுநல இயக்க பொதுச்செயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-

தமிழக அரசின் பல்வேறு துறைகள் மற்றும் அரசுப்பள்ளிகளில் 9.42 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களது ஓய்வு வயது 58 ஆக இருந்த நிலையில் கடந்த அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் 60 ஆக உயர்த்தப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக ஒவ்வொரு மாதமும் சராசரியாக 4 ஆயிரம் பேர் வீதம் ஆண்டுக்கு 50 ஆயிரம் பேர் ஓய்வுபெற்று வருகின்றனர். சென்ற மாத கடைசி நாளில் (மே 31) மட்டும் 8 ஆயிரத்து 144 பேர் ஓய்வுபெற்றனர். இன்றைய நிலவரப்படி அரசுத்துறைகளில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட காலிப்பணி இடங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் 3.5 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் எனவும் கூடுதலாக 2 லட்சம் பணி இடங்கள் உருவாக்கப்படும் எனவும் தெரிவித்து இருந்தது. ஆனால் கடந்த 4 ஆண்டுகளில் டி.என்.பி.எஸ்.சி/ சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம்/ ஆசிரியர் தேர்வு வாரியம் உள்ளிட்ட தேர்வு முகமைகள் மூலம் 34 ஆயிரத்து 384 பேர் மட்டுமே அரசுப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தில் ஆறு முதன்மை கல்வி அதிகாரிகள் 20 மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் 2000க்கும் அதிகமான அரசுப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணி இடங்கள் காலியாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் கல்விப்பணி அடியோடு பாதிக்கப்பட்டு மாணவ, மாணவிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. அரசுத்துறைகளில் காலிப்பணி இடங்கள் அதிகரித்து, பணிகள் சரிவர நடைபெறாமல் தேக்கம் அடைவதால் பொதுமக்கள் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர்.

தற்போதுள்ள ஊழியர்களைக் கொண்டே காலிப்பணி இடத்தில் உள்ள பணிகளை செய்ய வைப்பதால் பணியாற்றும் நபர்களுக்கு பணிச்சுமை அதிகரிப்பதோடு இவர்கள் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகின்றனர். பல்வேறு துறைகளில் தினக்கூலி சம்பளத் தொழிலாளர்களைக் கொண்டு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் அவர்களது எதிர்காலம் மட்டுமல்ல வேலையினை எதிர்நோக்கி காத்திருப்போரும் ஏமாற்றத்தினையே எதிர்நோக்கி உள்ளனர்.

படித்து வேலையின்றி தவிக்கும் இளைஞர்கள் தவித்து இருக்க காலிப்பணி இடங்களை நிரப்பாமல் அரசு அலட்சியம் காட்டி வருவதால் இவர்களது எதிர்காலம் பாதிக்கப்படுவதோடு சமூக அமைதியும் சீர்குலையும் ஆபத்து உள்ளது. எனவே உரிய வேகத்தில் அரசின் திட்டங்களை மக்கள் பயன்பெறவும், வளர்ச்சிப் பணிகள் வேகமாக நிறைவேற்றப்படவும், வேலைவாய்ப்பு இன்றி பரிதவிப்போரின் தவிப்பை போக்கிடவும், அரசுத்துறைகளில் உள்ள காலிப்பணி இடங்களை உடனடியாக நிரப்பிட அரசு துரித நடவடிக்கை எடுப்பது அவசர அவசியம்.

தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.