பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பிரதான வேடத்தில் நடிக்கும் கந்தன்மலை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக முன்னாள் காரைக்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த இவர், தற்போது அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராக உள்ளார். பல ஆண்டுகாலமாக அரசியலில் இருந்து வரும் ஹெச்.ராஜா தற்போது திரைப்பட நடிகராக களம் இறங்கியுள்ளார்.
அறிமுக இயக்குநர் வீரமுருகன் இயக்கும் புதிய படம் ஒன்றில் ஹெச்.ராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்துக்கு கந்தன்மலை என்று பெயரிடப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் பின்னணியில் இந்த படம் உருவாகி வருகிறது.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. போஸ்டரில் ஹெச்.ராஜா முறுக்கு மீசையுடன் காணப்படுகிறார். பாஜக ஆதரவாளர்கள் பலரும் இதனை தங்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து ஹெச்.ராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தர்ஹாவுக்கு ஆடு கோழி கொண்டு செல்லக் கூடாது, என்று காவல்துறை போட்ட உத்தரவுக்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகளும் அதை எதிர்த்து இந்து இயக்கங்களும் மாறி மாறி குற்றம் சாட்டி போராட்டங்களை நடத்தி வருகின்றன. இதை, மையமாக வைத்து கந்தன்மலை கதைகளம் பின்னப்பட்டுள்ளதாக தெரிகிறது.














