வெள்ளம் புகுந்த மாவட்டங்களுக்கு குடிநீர் தரப்பட வில்லை - ராமதாஸ் குற்றச்சாட்டு

வெள்ளம் புகுந்த மாவட்டங்களுக்கு குடிநீர் தேவை - ராமதாஸ்

Aug 19, 2018, 16:31 PM IST

காவிரி ஆறு உடைந்து தண்ணீர் புகுந்துள்ளது கிராமங்களில் பாதிக்கப்பட்ட மக்களில் பெரும்மான்மையினருக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட வசதிகளை தமிழக அரசு செய்து தரப்படவில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

flood cauvery

இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களில் பெய்து வரும் மழை காரணமாக காவிரியில் வினாடிக்கு 2 லட்சம் கன அடிக்கும் கூடுதலான தண்ணீர் திறந்து விடப்பட்டிருப்பதால் காவிரி பாசன மாவட்டங்களின் பெரும்பாலான கிராமங்கள் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கின்றன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகளைக் கூட தமிழக அரசு வழங்காதது கண்டிக்கத் தக்கதாகும்.

மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு 2 லட்சத்து 5 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில், பவானி அணையிலிருந்து வினாடிக்கு சுமார் 50 ஆயிரம் கன அடி வீதமும் தண்ணீர் திறந்து விடப்பட்டிருக்கிறது. இந்தத் தண்ணீரின் ஒரு பகுதி காவிரியிலும், பெரும்பகுதி கொள்ளிடத்திலும் திறந்து விடப்பட்டிருப்பதால் இரு ஆறுகளின் கரையோரப் பகுதிகளில் பெருவெள்ளம் ஏற்பட்டிருக்கிறது.

தஞ்சாவூர் மாவட்டம் தட்டுமால் பகுதியில் கொள்ளிடம் ஆற்றின் கரை உடைந்ததால் தான் அப்பகுதியில் உள்ள கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களில் பெரும்மான்மையினருக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப் படவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அந்தந்த பகுதிகளில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியினர் தான் தங்களின் சொந்த முயற்சியில் உணவு, குடிநீர் உள்ளிட்டவற்றை ஏற்பாடு செய்து கொடுத்து வருகின்றனர்.

கொள்ளிடத்தில் திறந்து விடப்படும் தண்னீரின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வேறு ஏதேனும் இடங்களில் உடைப்பு ஏற்படாமல் தடுக்க பொதுப்பணித்துறை பணியாளர்கள் சுற்றுக் காவல் மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும். ஆனால், அத்தகைய பணிகளோ, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோ மேற்கொள்ளப் படுவதாக தெரியவில்லை. இதனால் அடுத்து வரும் நாட்களில் நிலைமை மேலும் மோசமாகக்கூடும்.

Ramdoss

ஈரோடு மாவட்டத்தில் பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று நேரில் சென்று பார்வையிட்டிருக்கிறார். அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கியுள்ளார். ஆனால், காவிரி பாசன மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட முதலமைச்சர் இன்று வரை செல்லவில்லை. இனியும் செல்வாரா? என்பதும் தெரியவில்லை.

கேரளத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் வரலாறு காணாத அளவில் இருப்பதால் பெரும்பான்மையான ஊடகங்கள் அது குறித்தே செய்தி வெளியிட்டு வருகின்றன. அதை தவறு என்று கூற முடியாது. ஆனால், ஊடக வெளிச்சம் முழுவதும் கேரளத்தின் மீது குவிந்திருப்பதால் காவிரி மற்றும் கொள்ளிடக் கரையோரங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் முழுமையாக வெளி வரவில்லை.

ஆனாலும், இந்த பாதிப்புகளை அரசு மதிப்பிட்டு போதிய உதவிகளை வழங்கியிருக்க வேண்டும். ஆனால், தமிழக ஆட்சியாளர்கள் மக்களுக்கு உதவிகளை செய்யாமல் உறங்கிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலை மாற்றப்பட வேண்டும்.

தமிழக அரசு உடனடியாக விழித்துக் கொண்டு காவிரி பாசன மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற் கொள்ள வேண்டும். முதலமைச்சர் உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்க வேண்டும்.” இவ்வாறு அந்த அறிக்கையில் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

You'r reading வெள்ளம் புகுந்த மாவட்டங்களுக்கு குடிநீர் தரப்பட வில்லை - ராமதாஸ் குற்றச்சாட்டு Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை