62 தடுப்பணைகள் புதிய திட்டமா?- ராமதாஸ்

Aug 20, 2018, 16:14 PM IST
வெள்ள நீரை சேமிக்க 62 தடுப்பணைகள் அமைக்கப்பட உள்ளதை புதிய திட்டம் போல் அறிவித்து ஏமாற்ற முயற்சிப்பதாக என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். 
அவர் விடுத்துள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டிலுள்ள ஆறுகளின் தண்ணீர் வீணாக கடலில் கலப்பதைத் தடுக்கும் வகையில் அவற்றின் குறுக்கே 62 தடுப்பணைகள் ரூ.292 கோடி செலவில் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருக்கிறார். பல ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டத்தை இன்னும் செயல்படுத்தாமல் ஏதோ புதிய திட்டத்தைப் போல அறிவித்து ஏமாற்ற முயல்வது கண்டிக்கத்தக்கது.
 
மேட்டூர் அணையிலிருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்ட நீர், பாசனக் கால்வாய்கள் முறையாக தூர்வாரப்படாததாலும், தேவையான இடங்களில் தடுப்பணைகள் கட்டப்படாததாலும், வீணாக கடலில் கலந்திருக்கிறது. இதுதொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் முன்வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு  பதில் கூற முடியாமல் தான் காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகளில் தடுப்பணைகள் கட்டப்படும் என்று ஈரோடு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருக்கிறார். 
 
காவிரி பாசன மாவட்டங்கள் சமவெளியாக இருப்பதால், அங்கு ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட முடியாது என்று கூறி வந்த முதல்வர், இப்போது உண்மையை உணர்ந்து கொண்டு தடுப்பணைகளை கட்ட முன்வந்திருப்பது ஆறுதலான விஷயமாகும்.ஆனால், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இப்போது அறிவித்துள்ள 62 தடுப்பணைகளைக் கட்டும் திட்டம் புதிதல்ல. 
 
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பே அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்படாமல் கிடப்பில் போட்டு வைக்கப்பட்டிருந்த திட்டத்தை தான் புதிய திட்டமாக அறிவித்து மக்களையும், விவசாயிகளையும் ஏமாற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முயல்கிறார் என்று வெளிப்படையாகவே குற்றஞ்சாற்றுகிறேன்.
காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் நடக்கும் மணல் கொள்ளையால் தஞ்சை, நாகை மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைவதாகவும், அதைத் தடுக்க இரு ஆறுகளிலும் தடுப்பணைகள் கட்ட ஆணையிட வேண்டும் என்றும் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. 
 
இந்த வழக்கில் தமிழக அரசின் பொதுப்பணித்துறை சார்பில் கடந்த 09.06.2014 அன்று உயர்நீதிமன்றத்தில்  தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ‘‘காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகளில் தடுப்பணைகள், தளமட்ட சுவர்கள், கதவணைகள் என 61 சிறு அணைகளை ரூ.117 கோடி மதிப்பீட்டில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பாசன, குடிநீர் வசதிகள் மேம்படும்’’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இது 2013-ஆம் ஆண்டுக்கு முன்பே இறுதி செய்யப்பட்ட ஒன்றாகும். 
 
இந்த தடுப்பணைத் திட்டம் அறிவிக்கப்பட்ட காலத்திலேயே செயல்படுத்தப்பட்டிருந்தால் காவிரி பாசன மாவட்டங்களின் கடைமடை பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் சென்றிருக்கும். வீணாக கடலில் கலந்த நீரை முழுமையாக தடுத்திருக்க முடியாது என்றாலும், அதிகபட்சமாக 30 டி.எம்.சி நீரை தேக்கி வைத்திருக்க முடியும். அதுமட்டுமின்றி, பாசனக் கால்வாய்கள் மூலம் மேலும் 30 டி.எம்.சி தண்ணீரை காவிரி பாசன மாவட்டங்களில் உள்ள ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் சேமித்து வைத்திருக்க முடியும். 
 
தமிழக அரசின் அலட்சியம் காரணமாக சுமார் 60 டி.எம்.சி தண்ணீர் வீணாகியிருக்கிறது. அதுமட்டுமின்றி, 5 ஆண்டுகளுக்கு முன் ரூ.117 கோடி செலவில் நிறைவேற்றி முடிக்கப்பட்டிருக்க வேண்டிய இந்தத் திட்டத்தின் மதிப்பு இரு மடங்காக, அதாவது ரூ. 292 கோடியாக அதிகரித்திருக்கிறது. குறித்த காலத்தில் இத்திட்டத்தை செயல்படுத்தத் தவறியதற்காக மக்களிடம் அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்.
 
இதற்கெல்லாம் மேலாக இது மிகவும் சாதாரணத் திட்டம். கல்லணைக்கு கீழே ஓடும் காவிரி ஆற்றிலும் அதன் சிறிய கிளை ஆறுகளிலும் மட்டுமே இத்திட்டத்தை செயல்படுத்த முடியும். இந்த தடுப்பணைகள் ஒவ்வொன்றிலும் அதிகபட்சமாக அரை டி.எம்.சி தண்ணீரை மட்டுமே சேமித்து வைக்க முடியும். இது போதுமானதல்ல. கொள்ளிடம் ஆற்றிலும், முக்கொம்புக்கு முன்னால் உள்ள அகண்ட காவிரியிலும் குறைந்தது 5 டி.எம்.சி கொள்ளளவுள்ள தடுப்பணைகளைக் கட்ட வேண்டும். இதற்குத் தனியாகத் திட்டம் வகுத்து செயல்படுத்தினால் தான் காவிரி பாசன மாவட்டங்களை வளமானதாக மாற்ற முடியும்.
 
எனவே, இனியும் தாமதிக்காமல் காவிரி மற்றும் கிளை ஆறுகளில் 62 தடுப்பணைகளை கட்டும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும். அதுமட்டுமின்றி, பெரிய அளவிலான தடுப்பணைகளைக் கட்டுவதற்கான திட்டத்தையும் விரைவாக வகுத்து செயல்படுத்த வேண்டும்.
 
மேலும் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகள், பாசனக் கால்வாய்கள், அவற்றுடன் இணைக்கப்பட்ட ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளையும் தூர்வாரி பராமரிப்பதற்கான திட்டத்தையும் தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்." என வலியுறுத்தியுள்ளார்.

You'r reading 62 தடுப்பணைகள் புதிய திட்டமா?- ராமதாஸ் Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை