கரூரில் சிறுவன் அடித்துக் கொலை? 5 பேர் கைது!

by Manjula, Sep 24, 2018, 11:54 AM IST

கரூர் மாவட்டம் உப்பிடமங்களத்தைச் அடுத்த அல்லாலிகவுண்டனூரைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மனைவி இலஞ்சியம். கணவர் இறந்துவிட்ட நிலையில் இலஞ்சியம் தனது இரு குழந்தைகளுடனும் வசித்து வந்துள்ளார். இவரது மகன் பாலசுப்ரமணி(15), 8 ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு, அதற்குமேல் பள்ளிக்குச் செல்லாமல், கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை இரவு அதே பகுதியைச் சேர்ந்த முனியாண்டி என்பவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு சில பொருட்கள் காணாமல் போயுள்ளது. செல்போனும் திருடு போயுள்ளது.

இதையடுத்து, சிறுவன் மீது சந்தேகமடைந்த சிலர், சிறுவனின் தாய் இலஞ்சியம், தங்கை நந்தினி ஆகியோரை ஊருக்கு வெளியே உள்ள சமுதாயக் கூடத்துக்கு செல்லுமாறு கூறி அனுப்பிவிட்டு, சிறுவனின் வீட்டிற்கு சென்றுள்ளனர். பின்னர் சிறுவன் பாலசுப்ரமணியை அவரது வீட்டின் முன்பு கம்பத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்துள்ளனர். இதில், படுகாயமடைந்த சிறுவன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.

இந்நிலையில், நேற்று காலை ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்குத் திரும்பிய இலஞ்சியம் தனது மகன் இறந்து போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த வெள்ளியணை போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று சிறுவனின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இகுறித்து கிராமத்தினரிடம் விசாரணை நடத்திய போலீசார், சிறுவனை அடித்துக் கொன்ற வழக்கில், அல்லாலி கவுண்டனூரைச் சேர்ந்த பெரியசாமி, செல்வகுமார், மணிவேல், முனியாண்டி, முனியப்பன் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

இவர்களை, கரூர் மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி ரஹோத்தமன் முன்னிலையில் ஆஜர்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

செல்போன் திருடியதாக 15 வயது சிறுவனை அடித்துக் கொன்றவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ‘கரூரில் செல்போன் திருடியதாகக் கூறி 15 வயது சிறுவனை ஒரு கிராமமே சேர்ந்து அடித்துக் கொன்றிருக்கும் செயல் நெஞ்சை பதற வைக்கிறது!

விபத்தாகவோ, வறுமையினாலோ சிறுவர்கள் வழி தவறினால், சீர்திருத்தப் பள்ளிகளில் சேர்க்க வேண்டுமே தவிர, அடித்துக் கொல்லும் உரிமை எவருக்கும் கிடையாது. ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்து 8ஆம் வகுப்புக்கு மேல் படிக்க வசதியில்லாமல், கூலி வேலைக்குச் சென்று வந்த அச்சிறுவனின் குடும்பத்திற்கு இப்போது யார் பொறுப்பு?

இதற்குக் காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை ஈவு இரக்கமின்று சட்டத்தின் முன்பு நிறுத்தி உரிய தண்டனை வழங்கிட வேண்டும்’. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

You'r reading கரூரில் சிறுவன் அடித்துக் கொலை? 5 பேர் கைது! Originally posted on The Subeditor Tamil

More Crime News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை