முதல்வர் மீதான திமுக புகாரில் முகாந்திரம் இல்லை- லஞ்ச ஒழிப்புத்துறை

Oct 9, 2018, 14:07 PM IST

நெடுஞ்சாலை துறை ஒப்பந்தம் ஒதுக்கிய விவகாரத்தில், முதலமைச்சர் மீதான திமுகவின் புகாரில் முகாந்திரம் இல்லை எனவும் லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் சாலை பணிகளுக்கு ஒப்பந்தங்கள் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக கூறி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்ய கோரி திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் மீண்டும் விசாரனைக்கு வந்தது. அப்போது, லஞ்ச ஒழிப்பு துறை தாக்கல் செய்த அறிக்கைகளை பார்க்கும் போது விசாரணை நியாயமாக நடக்காது. இந்த வழக்கை சிறப்பு புலான்வு குழு விசாரிக்க உத்தரவிட வேண்டும் என திமுக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.


"நெடுஞ்சாலை துறை ஒப்பந்தத்தில் முறைகேடு ஏதும் நடைபெறவில்லை. முதலமைச்சர் பழனிசாமி மீதான திமுக புகாரின் ஆரம்பகட்ட விசாரணையிலேயே முகாந்திரம் இல்லை என்பதால் மேற்கொண்டு விசாரணை நடத்த தேவையில்லை" என லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது


லஞ்ச ஒழிப்பு துறை யார் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகிறது என நீதிபதி, கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், ஊழல் மற்றும் கண்காணிப்பு ஆணையரின் கட்டுப்பாட்டில் இயங்கும் லஞ்ச ஒழிப்பு துறை, தன்னிச்சையாக செயல்படகூடிய அமைப்பு. தங்களுடைய விசாரணை விவரங்களை கூட லஞ்ச ஒழிப்பு துறை, டிஜிபியிடம் தெரிவிக்க தேவையில்லை எனவும் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ஊழல் மற்றும் கண்காணிப்பு ஆணையரை யார் நியமிப்பது என நீதிபதி கேள்வி எழுப்பினார். மூத்த கூடுதல் தலைமை செயலாளர் அந்தஸ்தில் உள்ள அதிகாரியை அரசு நியமிக்கும் என அரசு தலைமை வழக்கறிஞர் பதிலளித்தார். இதையடுத்து, திமுக தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.

You'r reading முதல்வர் மீதான திமுக புகாரில் முகாந்திரம் இல்லை- லஞ்ச ஒழிப்புத்துறை Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை