ஆட்சியாளர்கள் அலட்சியமே உயிர்ப்பலிக்கு காரணம்: டெங்கு விவகாரத்தில் ஸ்டாலின் காட்டம்!

Stalin slams AIADMK

by Kani Selvan, Nov 6, 2018, 09:00 AM IST

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதற்கு தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருவதாக கூறி வரும் நிலையில், சென்னையில் திமுக சார்பில் டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் பணியை திமுக தலைவர் ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் தொடங்கி வைத்தார்.

இதன் பின்னர், இது குறித்து ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில்,

“மக்கள் பணியே மகேசன் பணி” என பேரறிஞர் அண்ணா வகுத்தளித்த நெறியில் - தலைவர் கலைஞர் நடந்த வழியில், திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து தொய்வின்றிச் செயலாற்றி வருகிறது.

தமிழ்நாட்டையே அச்சுறுத்தி வரும் டெங்கு காய்ச்சல் மற்றும் பன்றிக் காய்ச்சலுக்கு பலரும் பலியாகி வருவது மிகுந்த வேதனையை அளிக்கிறது.

பருவநிலை மாற்றத்தையும் நோய்த் தடுப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கவனத்தில் கொள்ளாமல் கொள்ளையடிப்பதற்கே நேரம் போதாமல் இருக்கும் ஆட்சியாளர்கள் காட்டிய அலட்சியத்தின் விளைவாக உயிர்ப்பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

மக்கள் நலனின் இந்த அரசுக்கு அக்கறை இருக்குமானால் தமிழ்நாட்டை உடனடியாக ‘மெடிக்கல் எமர்ஜென்சி’ மாநிலமாக அறிவித்து உரிய மருத்துவ சிகிச்சை நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும் என வலியுறுத்தியும் அ.தி.மு.க. ஆட்சியினர் கவனம் செலுத்தவில்லை.

ஆட்சிப் பொறுப்பில் இல்லாவிட்டாலும் தி.மு.கழகம் தன்னால் இயன்ற அளவில் மக்கள் நலப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. திமுக மருத்துவர் அணி சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, நேற்று (4-11-2018) அன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிலவேம்புக் கசாயம் வழங்கும் நிகழ்வைத் தொடங்கி வைத்தேன். டெங்கு காய்ச்சல் போன்ற கடுமையான காய்ச்சலுக்கு நிலவேம்புக் கசாயம் ஒரு தடுப்பு மருந்தாக இருக்கும் என்ற அடிப்படையில், தி.மு.கழக ஆட்சி நடைபெற்ற காலத்திலேயே சென்னை மாநகராட்சியில் இது வழங்கப்பட்டது. தொடர்ந்து பல முறையும் கழகத்தின் சார்பில் நிலவேம்புக் கசாயம் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது அண்ணா அறிவாலயத்தில் தொடங்கி வைக்கப்பட்ட நிலவேம்புக் கசாயம் வழங்கும் பணி பருவமழைக்காலம் முடியும் வரையிலும், காய்ச்சலை ஏற்படுத்தும் கொசுக்களின் உற்பத்தி மட்டுப்படும் வரையிலும் தொடர்ந்திட வசதி செய்யப்பட்டுள்ளது.

தி.மு.கழகத்தின் தலைமை நிலையமான அண்ணா அறிவாலயத்தில் நிலவேம்புக் குடிநீர் வழங்கப்படுவது போலவே,கழகத்தின் மாவட்ட- ஒன்றிய- நகர- பேரூர்- கிளைக் கழக அலுவலகங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் நிலவேம்புக் கசாயம் தொடர்ந்து வழங்கி, நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு, மக்கள் நலன் காக்கும் பணியில் கழகத்தினர் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

You'r reading ஆட்சியாளர்கள் அலட்சியமே உயிர்ப்பலிக்கு காரணம்: டெங்கு விவகாரத்தில் ஸ்டாலின் காட்டம்! Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை