டெல்லி அரசியலில் பேரறிஞர் அண்ணா முதல் மருமகன்rsquo சபரீசன் வரை.....எப்படி இருந்த திமுக இப்படியா? புலம்பும் உடன்பிறப்புகள்!

Annas to son-in-law Sabarasan...How was DMK this? Lamentations siblings!

by Mathivanan, Dec 12, 2018, 11:32 AM IST

திமுக முதன் முதலில் நாடாளுமன்றத்தில் காலடி எடுத்து வைத்த 1962ம் ஆண்டு முதல் தற்போது வரை டெல்லியில் திமுகவின் முகமாக பல்வேறு காலக்கட்டங்களில் முக்கியத் தலைவர்கள் முக்கியப் பங்காற்றியுள்ளனர். தற்போது தி மு க வின் முகமாக மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் முன்னிறுத்தப்பட்டுள்ளார். இந்த விவகாரம் திமுக மேலிட வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

மத்தியில் தேர்தல் நெருங்கும் நேரத்தில் தங்கை கனிமொழியை புறக்கணித்து மருமகன் சபரீசனை டெல்லியில் தமது மனசாட்சியாக ஸ்டாலின் முன்னிறுத்துவதால் பரபரத்து கிடக்கிறது டெல்லி மற்றும் தமிழக அரசியல் களம். டெல்லியில் திமுகவின் முகமாக செயல்பட்டு சாதனை படைத்தவர்களின் பட்டியல் இதோ!

முதன் முதலில் 1962-ல் தான் திமுக நாடாளுமன்றத்தில் காலடி வைத்தது. ராஜ்யசபா எம்.பி.க்களாக அண்ணாவும் நாஞ்சில் மனோகரனும் காலடி வைத்தனர்.

திராவிட நாடு கோரிக்கை, இந்தி எதிர்ப்பு பிரச்னைகளில் அண்ணாவின் வாதத்திறமை பிரதமர் நேரு உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களை கவர்ந்தது. அத்துடன் திமுகவின் முக்கியத்துவத்தையும் நாடறியச் செய்தார் அண்ணா.

1967ல் அண்ணா முதல்வரானவுடன் நாஞ்சில் மனோகரன் டெல்லியில் திமுகவின் முகமானார். இந்தக் காலக்கட்டம் தான் டெல்லியில் திமுகவின் முக்கியத்துவத்தை உணரச் செய்தது எனலாம்.

பிரதமராக இருந்த இந்திரா காந்திக்கும் காங்கிரசின் மூத்த தலைவர்களுக்கும் இடையிலான மோதல் போக்கால் அக்கட்சி இரண்டாக பிளவுபட்டது. இதனால் இந்திரா காந்தி அரசு மெஜாரிட்டி இழந்து தவித்தது.

அப்போது 25 எம்.பிக்கள் வைத்திருந்த திமுக, இந்திராவுக்கு ஆதாவு தெரிவித்து முட்டுக் கொடுக்க நாஞ்சில் மனோகரனின் சாமர்த்திய காய் நகர்த்தலே காரணம். தொடர்ந்து 1971-ல் பலமே இல்லாத இந்திரா காங்கிரசுடன் கூட்டணி வைத்து தமிழகத்தில் பலமாக இருந்த காமராஜர் தலைமையிலான பழைய காங்கிரசை மண் கவ்வச் செய்ததிலும் சூத்திரதாரி நாஞ்சிலார்தான்.

இதனாலேயே மந்திரக்கோல் மைனர் என்றும் செல்லமாக அழைக்கபட்டார். எம்.ஜி.ஆர் தனிக் கட்சி தொடங்க நாஞ்சிலார் அதில் ஐக்கியமானார். இதனால் டெல்லியின் திமுக முகமானார் கருணாநிதியின் மருமகன் முரசொலி மாறன்.

1975 எமர்ஜென்சி காலம் முதல் 2002-ல் அவர் காலமாகும் வரை டெல்லியில் கருணாநிதியின் மனசாட்சி என்ற புகழுடன் கால் நூற்றாண்டுககும் மேலாக அசைக்க முடியாத சக்தியாக கோலோச்சினார் மாறன். எமர்ஜெனசி எதிர்ப்பு நிலை எடுத்து 1977-ல் ஜனதா ஆட்சி அமைய மாறனும் ஒரு காரணகர்த்தாவாக திகழ்ந்தார்.

பின்னர் 1980-ல் இந்திராவுடன் கூட்டணி அமைத்து மக்களவைத் தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி கண்டது. இதனால் நன்றாக ஆட்சி நடத்தி வந்த எம்.ஜி.ஆர். ஆட்சியை கலைக்கவும் இவரே காரணம்.

1989-ல் வி.பி.சிங், 1996ல் தேவேகவுடா, குஜ்ரால் ஆகியோர் அமைச்சரவையில் Uங்கு, 1999ல் வாஜ்பாய் அமைச்சரவையில் பங்கு என தி மு க வின் அச்சாணியாக திகழ்ந்தவர் மாறன். 1980களில் முரசொலி மாறன் முக்கியத்துவம் பெற்றிருந்த காலக்கட்டங்களில் தான் டெல்லியில் காலடி வைத்தார் வைகோ.

ராஜ்யசபா எம்.பி.யாக மூன்று முறை செயல்பட்ட அவரால் நாடாளுமன்றத்தில் கர்ஜிக்க மட்டுமே முடிந்தது. தி மு க வின் குரலாக அவரது வாதங்கள் அப்போது பிரதமராக இருந்த இந்திரா, ராஜுவ் ஆகியோரையே வியப்பில் ஆழ்த்தியது எனலாம். ஆனால் அவர் தனிக்கட்சி தொடங்கி பிரிந்து போய்விட்டார்.

2002-ல் மாறன் மறைவைத் தொடர்ந்து டி.ஆர்.பாலு திமுக முகமானார். வாஜ்பாய் அமைச்சரவையில் இருந்து கடைசி நேரத்தில் விலகி 2004ல் காங்கிரசுடன் கூட்டணி வைக்க டி.ஆர்.பாலுவின் டெல்லி அரசியலும் முக்கியக் காரணம். இதனால் 2004-ல் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசிலும் திமுகவுக்கு பங்கு கிடைத்தது.

ஆனால் 2004-ல் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்ற தயாநிதி மாறன் டெல்லியில் முன்னிலைப்படுத்தப்பட்டு டி.ஆர்.பாலு பின் தள்ளப்பட்டார். தயாநிதியோ பதவியை சுய விளம்பரத்திற்கும் லாப நோக்கிலும் செயல்பட பெரும் சர்ச்சைக்கு ஆளாகி கட்சியிலிருந்தும் அமைச்சர் பதவியிலிருந்தும் தனிமைப்படுத்தப்பட்டதும் நடந்தது.

அவரைத் தொடர்ந்து ஆ.ராசா டெல்லி முகமாக்கப்பட அவரும் 2ஜி ஊழல் சர்ச்சையில் சிக்கி கழற்றி விடப்பட்டார். ராஜ்யசபா எம்.பி உள்ள கனிமொழி கடந்த 6 ஆண்டுகளாக திமுகவின் டெல்லி முகமாக செயல்பட்டாலும் அவர் மீது ஸ்டாலினுக்கு முழு நம்பிக்கை இல்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் தான் விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் தனது மனசாட்சியாக தனது மருமகனையே ஸ்டாலின் முன்னிறுத்த முடிவு எடுத்துள்ளார் எனக் கூறப்படுகிறது. இதனால் டெல்லியில் கோலோச்சிய பெருந்தலைகள் கடும் விரக்தியுடன் இதனை பார்ப்பதாக தெரிகிறது.

மேலும் சபரீசனுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை வெளிப்படையாக எதிர்க்கவோ விமர்சிக்கவோ முடியாமல் உள்ளக் குமுறலில் உள்ளதாக திமுகவிலேயே பேச்சு பரவிக் கிடக்கிறது.

You'r reading டெல்லி அரசியலில் பேரறிஞர் அண்ணா முதல் மருமகன்rsquo சபரீசன் வரை.....எப்படி இருந்த திமுக இப்படியா? புலம்பும் உடன்பிறப்புகள்! Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை