அமித்ஷாவை சந்தித்தாரா அழகிரி? பாஜகவில் இணையப் போவதாக மதுரையில் பரபரப்பு

பாஜக தேசியத் தலைவர் அமித்ஷாவை மு.க. அழகிரி சந்தித்ததாகவும் விரைவில் பாரதிய ஜனதா கட்சியில் இணைய இருப்பதாகவும் வெளியான தகவல் மதுரையில் அவரது ஆதரவாளர்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

திமுக தலைவராக ஸ்டாலினை ஏற்றுக் கொள்வதாக அறிவித்த பின்னரும் கூட அழகிரியை யாரும் சீண்டவில்லை. திருவாரூர் தேர்தலில் அழகிரி குட்டையை குழப்பிவிடக் கூடும் என்பதால் அவரை மீண்டும் கட்சியில் சேர்க்கப் போவதாக திமுக தரப்பு கூறிவந்தது.

அழகிரியும் இதை நம்பி மகிழ்ச்சியோடு வலம் வந்தார். இவற்றை நாம் ஏற்கனவே பதிவு செய்திருந்தோம். தற்போது திருவாரூர் தேர்தல் ரத்தாகிவிட்ட நிலையில் வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிய கதையாகிவிட்டது.

திமுகவில் அழகிரியை மீண்டும் சேர்க்கும் பேச்சை ஸ்டாலின் தரப்பு ஒத்திவைத்துவிட்டதாம். இதில் கடுப்பாகிப் போன அழகிரி,  அமித்ஷாவை சந்தித்து பேசியதாக மதுரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மதுரை அழகிரி வீட்டில் அதிகாலை 3 மணி முதல் 5 மணிக்குள் இந்த ரகசிய சந்திப்பு நடந்ததாக ஒருதரப்பு கூறுகிறது. மற்றொரு தரப்பு சென்னை ஈசிஆர் பங்களாவில் சந்தித்து பேசியதாக தெரிவிக்கிறது.

அமித்ஷாவுடனான சந்திப்பின் போது தாம் பாஜகவில் இணைய ஒப்புக் கொண்டார் அழகிரி; விரைவில் அண்ணன் அந்த கட்சியில் ஐக்கியமாவது உறுதி என மதுரையில் அழகிரி ஆதரவாளர்கள் அடித்து கூறி வருகின்றனர். மதுரை வரும் பிரதமர் மோடி முன்னிலையில் அழகிரி ஐக்கியமானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என கூறுகின்றனர் ஆதரவாளர்கள்.

 

 

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

மேலும் செய்திகள்