
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் மொத்தம் சுமார் 30கல்குவாரிகள் இயங்கி வருகின்றன. மேலும் , பாப்பாக்குடி ஒன்றியம்,ஆலங்குளம் ஒன்றியம், கடையம் ஒன்றியம் என மூன்று பகுதியிலும் மேலும் 16புதிய குவாரிகளுக்காக விண்ணப்பித்துள்ளதாக தெரிகிறது.
ஒவ்வொரு கல் குவாரியும் குறைந்தபட்சம் 50ஏக்கரில் ஆரம்பித்து 890ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. கேரளாவிற்கு கனிம வளங்கள் கொண்டு செல்வதற்காக புதிய கல் குவாரிகளுக்கு விரைவாக அனுமதி வழங்கப்படுவதாக சொல்கிறார்கள்.
தமிழகத்தில் எந்த சட்டமன்ற தொகுதியிலும் இல்லாத பெருமையாக ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியிலே 30க்கு மேற்பட்ட கல்குவாரிகள் செயல்படுவதற்கு தமிழக அரசு அனுமதித்துள்ளதாக கூறிக் கொள்கிறார்கள். இதன் காரணமாக, கனரக வாகனங்கள் வந்து செல்வதனால் கிராமத்து சாலைகளிளும், நகர்ப்புற சாலைகளிளும் பல்வேறு விபத்துகளும் ஏற்படுகின்றன.
கல்குவாரி வாகனங்களால் மக்கள் இன்னல்களையும் அனுபவித்து வருகின்றனர். இந்த நிலையில், முக்கூடல் அருகே ஓடக்கரை துலுக்கப்பட்டியில் நேற்று (மார்ச் 21 )கல்குவாரி லாரி ஒன்று மோதியதில் அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் வளர்த்து வந்த வளர்ப்பு நாய் இறந்து போனது. இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் சம்ப இடத்துக்கு வந்து மக்களிடத்தில் சமாதானம் பேசினர். இப்போது, நாயை அடித்து கொன்றது போல நாளை எங்களையும் கல்குவாரி வாகனங்கள் கொல்லும் என்று மக்கள் குமுறுகின்றனர். உடனடியாக, இந்த பிரச்னைக்கு தீர்வு காணவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.