நெல்லை மாவட்டம் பணகுடியைச் சேர்ந்த செல்வகுமார். விவசாயியான இவர் மீது தென்காசி மாவட்டம் கடையம் காவல் நிலையத்தில் ஆள் கடத்தல் வழக்கு நிலுவையில் உள்ளது. இதில், ஜாமீன் பெற்றுள்ள செல்வகுமார், தினமும் கடையம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு வருகிறார். இந்த வழக்கில் செல்வகுமாரின் வாகனத்தை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
இதற்கிடையே, செல்வகுமார் தன் மீதான வழக்கு தொடர்பாக, கடையம் காவல் ஆய்வாளர் மேரி ஜெமிதாவை சந்தித்து பேசியுள்ளார். அப்போது, வழக்கை விரைவில் முடித்து, கடத்தலுக்குப் பயன்படுத்திய வாகனத்தை விடுவிக்க ஏற்பாடு செய்வதாகவும், அதற்கு ரூ.30 ஆயிரம் லஞ்சம் கொடுக்கும்படி ஆய்வாளர் ஜெமிதா தெரிவித்துள்ளார். ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத செல்வகுமார், தென்காசி லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தார்.
அவர்களின் அறிவுரைப்படி, ரசாயனப் பவுடர் தடவிய ரூ.30 ஆயிரத்தை காவல் நிலையத்துக்கு கொண்டுசென்று, ஆய்வாளர் மேரி ஜெமிதாவிடம், செல்வகுமார் கொடுத்துள்ளார். இநத சமயத்தில் அங்கு மறைந்திருந்த தென்காசி லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி பால்சுதர் தலைமையிலான போலீஸார், காவல் ஆய்வாளர் மேரி ஜெமிதாவை கைது செய்தனர். இந்த அதிரடி கைதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.













