
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் யூனியன் குணராம நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட வேட்டைக்காரன் குளம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்தப் பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையில்
15 மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். தலைமை ஆசிரியராக கமருநிஷா மற்றும் ஆசிரியை பாரதி என இருவர் பணியாற்றி வருகின்றனர்.
இந்த துவக்கப் பள்ளி கட்டிடம் மிகவும் பழுதடைந்து காணப்பட்ட நிலையில் பள்ளி தலைமை ஆசிரியை கமருநிஷா பள்ளி கட்டிடத்தை பராமரிப்பு செய்யக்கோரி பள்ளி கல்வித்துறை அலுவலர் மற்றும் யூனியன் அலுவலருக்கு கடிதம் மூலம் தகவல் தெரிவித்த நிலையில் விடுமுறை காலங்களில் கூட பள்ளிக் கட்டிடம் பராமரிப்பு செய்யப்படாத நிலையில் நேற்று பள்ளி திறக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை வழக்கம் போன்று பள்ளி திறக்கப்பட்டு பள்ளிக்கு மாணவ மாணவிகள் வந்த நிலையில் பள்ளி கட்டிடத்தின் முகப்பு மேற்கூரை பெயர்ந்து பயங்கர சத்தத்துடன் கீழே விழுந்தது. அப்போது பள்ளிக் கட்டிடத்திற்குள் மாணவ மாணவிகள் யாரும் செல்லாததால் மாணவ, மாணவிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இந்த பராமரிப்பற்ற கட்டிடம் கடந்த 27 ஆண்டுகளுக்கு முன்பு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 1998 - 99-ம் ஆண்டில் அப்போதைய சட்டமன்ற உறுப்பினர் ரவி அருணனால் பள்ளிக் கட்டிடம் திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
வேட்டைக்காரன் குளம் கிராமத்தில் பள்ளிக் கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.