தென்காசி: நண்பரின் மகளுக்கே பாலியல் தொல்லை துப்பாக்கி காட்டி மிரட்டியவர் மும்பையில் பிடிபட்டார்

tenkasi-friend-s-daughter-sexually-harassed-man-who-threatened-her-with-a-gun-caught-in-mumbai

தென்காசி அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து துப்பாக்கியை காட்டி மிரட்டியவர் மும்பையில் கைது செய்யப்பட்டார்.

தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியைச் சேர்ந்தவர் நீலகண்டன் (58). இவர் தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். தென்காசி அருகேயுள்ள கிராமத்தில் இவரது நண்பர் வீடு உள்ளது. நீலகண்டன் அடிக்கடி அந்த வீட்டிற்கு சென்றுவந்தார். அப்போது நண்பரின் மகளான 12-ம் வகுப்பு மாணவியுடன் பேசி வந்துள்ளார்.

கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி 9 ம் தேதி அந்த மாணவியின் தம்பி உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் வீட்டில் மாணவி மட்டும் தனியாக இருந்தார். இந்த சமயத்தில் வீட்டிற்கு வந்த நீலகண்டன், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். விஷயத்தை வெளியே சொன்னால் சுட்டுக் கொன்றுவிடுவேன் என துப்பாக்கியை காட்டியும் மிரட்டியுள்ளார்.

ஆனாலும், மாணவி, ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் அந்த புகாரை பெற்று கொண்டு வழக்குப் பதிவு செய்ய கால தாமதம் செய்துள்ளனர். இதையடுத்து மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் நீலகண்டன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது.

கடந்த மே 17-ந் தேதி வழக்குப்பதிவு செய்யபட்டது. இதை அறிந்த அவர் தலைமறைவானார். இதற்கிடையே, நீலகண்டன் மும்பையில் இருப்பதாக தனிப்படைக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று, நீலகண்டனை கைது செய்து அழைத்து வந்தனர். பின்னர் அவர் தென்காசி நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.