
சுற்றுலாத்தளமான குற்றாலத்தில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட திருடர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றாலத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை காலம் என்பதால் சீசன் களைகட்டி வருகிறது. நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலம் அருவிகளுக்கு வருகை தந்து தங்களது குடும்பங்களுடன் ஆனந்த குளியலிட்டு வருகின்றனர்.குற்றாலம் பகுதியில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி சுற்றுலா பயணிகளிடம் தொடர் வழிப்பறி சம்பவங்களும் ஆங்காங்கே நடந்து வருகிறது.
இதையடுத்துசூ, வழிப்பறியில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து கைது செய்ய குற்றாலம் காவல்துறை சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில், குற்றாலம் மெயின் அருவியில் ஆண்கள் குளிக்கும் பகுதியில் கூட்டத்தோடு கூட்டமாக நின்று குளிக்கும் சுற்றுலா பயணிகளிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட இரண்டு நபர்களை இன்று( ஜூன் 10) குற்றாலம் போலீசார் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலியைச் சேர்ந்த அருண் பிரசாத் என்பவரிடம் இரண்டு பவுன் தங்கச் சங்கிலியும் நீலகிரி பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவரிடம் ஒரு பவுன் தங்கச் சங்கிலியும் மதுரை சார்ந்த ராஜ்குமார் என்பவரிடம் ஒரு பவுன் தங்கச் சங்கிலி திருடு போனதையடுத்து, போலீசார் துரிதமாக செயல்பட்டு மதுரையை சேர்ந்த சுரேஷ்குமார் (வயது 45) மற்றும் சிவகாசி பகுதியை சேர்ந்த விஜயகுமார் ( 37 ) ஆகிய இருவரை கைது செய்தனர்.
கூட்ட நெரிசலை பயன்படுத்தி செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை போலீசார் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணித்து வருகின்றனர்.