தென்காசியில் வீட்டை அபகரிக்க முயற்சி... ஜான்பாண்டியன் உள்ளிட்டோர் மீது காவல் நிலையத்தில் புகார்

attempt-to-seize-house-in-tenkasi-complaint-filed-at-police-station-against-john-pandian-and-others

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அருகேயுள்ள முன்னீர்பள்ளம் கிராமத்தை சேர்ந்த நிவன் மேத்யூ என்பவர் தென்காசி மாவட்டம் குற்றாலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது,

'எனது தாயார் கிறிஸ்டினா கேத்தரின் உடல்நிலை சரியில்லாததால் அவரின் மருத்துவ சிகிச்சைக்காக மதுரையில் வசித்து வருகிறேன். நான் கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11-ம் தேதி தென்காசி மாவட்டம் இலஞ்சி வாஞ்சி நகர் 124, முரளி குடியிருப்பு ரோடு பகுதியை சேர்ந்த காந்தி என்பவரின் பினாமியான செங்கோட்டை தாலுகா கீழ்ப்பிடாகை வடகரை பகுதியை சேர்ந்த பூமணி என்பவர் பெயரில் வைத்திருந்த வீட்டை ரூ.19 லட்சத்துக்கு வாங்கினேன். கிரையத்திற்கு முதல் நாளே காந்தி என்னிடமிருந்து 9 லட்சம் ரொக்கமாகவும் 10 லட்சத்தை காசோலையாகவும் பெற்று கொண்டார். தென்காசி இணை 1 சார்பதிவாளர் அலுவலகத்தில் கிரைய பதிவு முடிந்தது. சார்பதிவாளர் அலுவலகத்திலிருந்து வெளியே வந்தவுடன், காந்தி என்னிடம் காசோலைக்கு பதிலாக மீதி 10 லட்சத்தையும் ரொக்கமாகவே கொடுத்து விடும்படி கூறினார். நானும் அப்போது அவசர வேலையாக செல்ல வேண்டியிருந்ததால் 10 லட்சம் ரொக்கமாக அவரிடம் கொடுத்துவிட்டு, காசோலையை திருப்பி கேட்டேன். அதற்கு, காசோலையை வீட்டில் வைத்து விட்டு வந்து விட்டதாக காந்தி கூறினார். நானும் காந்தியின் பேச்சை நம்பி காசோலையை நாளை பெற்றுக் கொள்கிறேன் கூறிவிட்டு சென்று விட்டேன்.

ஆனால், தற்போது காந்தி அனைத்தையும் மறைத்து என் மீது திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் பூமணியிடத்தில் 10 லட்சம் மோசடி செய்ததாக பொய்யாக ஒரு புகார் மனுவை கொடுத்துள்ளார். அதன் பேரில் , என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் நான் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றேன் . இந்த வழக்கு திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது. இப்போது , நான் மதுரையில் இருப்பதால், காந்தி நான் வாங்கிய வீட்டை அபகரிக்க முயற்சி செய்து வருகிறார். மேலும், கூலிப்படையினர் மற்றும் ஜாதி கட்சித் தலைவர் ஜான் பாண்டியனை அழைத்து வந்து என்னுடைய வீட்டிற்கு சென்று பூட்டை உடைத்து அத்துமீறி உள்ளே சென்றுள்ளார். அடையாளம் தெரியாத நபர்களை என் வீட்டில் குடியிருக்க வைத்துள்ளார். இதனால் , எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

எனவே , காந்தி அவருடைய பினாமி பூமணி மற்றும் கூலிப்படையினர் ,ஜாதிகட்சி தலைவர் ஜான் பாண்டியன் மீது தக்க நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.