தென்காசி பள்ளி உரிமையாளர் வீட்டில் 1 1/4 கிலோ தங்கம். 50 லட்சம் கொள்ளை... வீட்டில் ரத்தம் சிந்தி கிடந்தது ஏன்?

1-1-4-kg-gold-found-in-tenkasi-school-owner-s-house-50-lakhs-looted

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள அடைக்கலப்பட்டினத்தை சேர்ந்தவர் ராஜசேகர். இவர் நெல்லை-தென்காசி நான்குவழிச்சாலையில் பள்ளி, பி.எட். கல்லூரி நடத்தி வருகிறார். வளாகத்தில் உள்ளேயே வீடு கட்டி மனைவி மகேஸ்வரி மற்றும் மகன் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.சமீபத்தில் அவர் சென்னையில் உறவினர் திருமணத்துக்கு குடும்பத்துடன் சென்றுவிட்ட நிலையில், நேற்று முன்தினம் வீட்டின் மாடி வழியாக புகுந்த மர்ம நபர்கள் சுமார் 1 1/4 கிலோ தங்கம் மற்றும் ரூ.50 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.கொள்ளையர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் உத்தரவின்பேரில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் காலையில் தொடங்கி மறுநாள் காலை வரையிலும் கொள்ளை நடந்த வீட்டில் தடயங்கள் ஏதேனும் சிக்குகிறதா? என்று போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது , பீரோவை ஒட்டிய சுவரில் ரத்தக்கறை படிந்திருந்தது. பீரோவை ஆயுதம் கொண்டு உடைக்கும்போது மர்மநபர்களின் கையில் அடிபட்டிருக்கலாம். அப்போது, கொட்டியிருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர். ரத்த மாதிரியை எடுத்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர்.

கொள்ளை நடந்த வீட்டின் பின்புறம் தனியாருக்கு சொந்தமான தோட்டங்கள் உள்ளன. அங்கு, சம்பவம் நடந்த தினத்தில் மீன் பிடித்துக்கொண்டிருந்த வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். பள்ளியின் எதிரே அமைந்துள்ள கடைகளில் உள்ள சி.சி.டி.வி. காமிராக்களை போலீசார் ஆய்வு செய்துள்ளனர்.

இதனிடையே புதிய திருப்பமாக இதுவரை சம்பவம் நடந்த வீட்டில் சி.சி.டி.வி. காமிராக்கள் இல்லை என்று கூறிவந்த நிலையில், அங்கு 2 காமிராக்கள் இருப்பதும், ஆனால் அவை பழுதாகி இருப்பதும் தெரியவந்துள்ளது. வீட்டின் உரிமையாளர் ராஜசேகர் பெரிய அளவில் தொழில்கள், கல்வி நிறுவனங்கள் நடத்தி வரும் நிலையில், பழுதடைந்த சி.சி.டி.வி. காமிராக்களை கூட சரிபார்க்காமல் விட்டது ஏன்? என பல்வேறு சந்தேகங்கள் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால், ராஜசேகர் மற்றும் அவரது குடும்பத்தினரிடமும் போலீசார் பல்வேறு கோணங்களிலும் விசாரித்து வருகின்றனர்.