சங்கரன்கோவில் : இந்து மதம் குறித்து பேஸ்புக்கில் அவதூறு பதிவு, வைகோவின் முன்னாள் உதவியாளர் கைது

sankarankoil-vaiko-s-former-aide-arrested-for-defamatory-post-on-facebook-about-hinduism

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வடகாசி அம்மன் கோவில் 1-ம் தெருவை சேர்ந்தவர் அருணகிரி (வயது 60). மதிமுக பொதுசெயலாளர் வைகோவிடம் உதவியாளராக இருந்தவர். இவர் முகநூலில் அருணகிரி சங்கரன்கோவில் என்ற பெயரில் கணக்கு வைத்துள்ளார். அடிக்கடி வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லும் அருணகிரி, ,ஊருக்கு வந்ததும் தனது சுற்றுலா பயணம் குறித்து முகநூலில் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார்.

இந்நிலையில், சமீபத்தில் தனது முகநூல் பக்கத்தில் இந்து கடவுள்களை இழிவுபடுத்தும் வகையிலும், இந்து மத பண்பாடுகளை அவமதிக்கும் வகையிலும், மதக்கலவரத்தை தூண்டும் வகையிலும் பதிவுகளை அவர் வெளியிட்டுள்ளார். தொடர்ச்சியாக, இந்து சமுதாய மக்களின் மன உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பதிவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சங்கரன்கோவில் நகர இந்து முன்னணி தலைவர் பாடாலிங்கம் என்ற ராஜா போலீசில் புகார் அளித்தார். தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்த சங்கரன்கோவில் டவுன் போலீசார் அருணகிரியை கைது செய்தனர். அவரிடத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.