தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே மேல நம்பிபுரத்தில் கடந்த மார்ச் 3 ஆம் தேதி தாய் , மகள் இருவரையும் கொலை செய்து தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற வழக்கில் தப்பி ஓடி தலைமறைவாயிருந்த ஒருவரை போலீசார் காலில் சுட்டு பிடித்தனர். இந்த வழக்கில் இரண்டு நாட்களாக இரவு பகல் பாராமலும் தீவிர விசாரணை மற்றும் தேடுதல் பணியில் ஈடுபட்டு கொலை செய்தவரை கைது செய்து தங்க நகைகளை மீட்டனர்.
இந்த வழக்கில் துரிதமாக செயல்பட்ட தூத்துக்குடி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் தீபு, தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் மதன், காவல் துணை கண்காணிப்பாளர்கள் விளாத்திகுளம் அசோகன், கோவில்பட்டி ஜெகநாதன், மணியாச்சி குரு வெங்கட்ராஜ், ஸ்ரீவைகுண்டம் ராமகிருஷ்ணன் மற்றும் தூத்துக்குடி மாவட்ட தடய அறிவியல் ஆய்வக உதவி இயக்குனர்கள்ஆனந்தி கலாலெட்சுமி, தனிவிரல் ரேகை பிரிவு ஆய்வாளர் மற்றும் 20 காவல் ஆய்வாளர்கள் உட்பட 79 காவல்துறையினருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அதோடு, கடந்த மாதம் தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த 10 காவல்துறையினருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. சிறப்பான பணி புரிந்த 89 காவல்துறையினருக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.