
குலசேகரப்பட்டினத்தில் இருந்து 2027 ஆம் ஆண்டு முதல் எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட் ஏவப்படும் என்று இஸ்ரோ இயக்குநர் வி. நாராயணன் தெரிவித்துள்ளார்.
கடந்த 1960 ஆம் ஆண்டுகளில் இறுதியில் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் முதல் ராக்கெட் ஏவுதளத்தை அமைக்க தமிழ்நாடுதான் முதலில் கருத்தில் கொள்ளப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை, சாயல்குடிக்கு அருகில் இருக்கும் வாலிநோக்கம் என்ற இடத்தில் ஏவுதளம் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. பின்னர், அந்த திட்டம் கைவிடப்பட்டது. தொடர்ந்து, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா தேர்வு செய்யப்பட்டது. தற்போது, நாட்டின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் தமிழகத்தில் அமைகிறது.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் கட்டும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சென்னையில் S. Ramakrishnan Centre of Excellence for Research in Fluid and Thermal Science ஆய்வு மையத்தில் இஸ்ரோ தலைவர் நாராயணன்பங்கேற்று பேசினார். அப்போது, அவர் கூறியதாவது, 'குலசேகரப்பட்டினத்தில் 950 கோடி செலவில் சிறிய ராக்கெட்டுகளை ஏவும் வகையில் ராக்கெட் தளம் கட்டப்பட்டு வருகிறது. இங்கிருந்து 500 கிலோ எடைகொண்ட செயற்கை கோள்களை ஏவ முடியும். 2027 ஆம் ஆண்டு குலசேகரப்பட்டினத்தில் இருந்து முதல் எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட் விண்ணுக்கு ஏவப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்திற்கு அருகில்தான் விண்வெளி தொழில் பூங்காவைத் தொடங்கவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.