
வளர்ந்த பாரதத்திற்கான இளைஞர்களின் பாராளுமன்றம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் தூத்துக்குடி தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இந்த கருத்தரங்க நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக பாஜக மூத்த தலைவரும், மாநில செயலாளருமான ராமஸ்ரீனிவாசன் கலந்து கொண்டு பேசினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறுகையில், 'தொகுதி மறுவரை பற்றி ஸ்டாலின் ரொம்ப குழப்புகிறார். அவர் நிழலை பார்த்து அவரே பயப்படுகின்றார். தொகுதி மறுவரையானது மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்த பின்பு தான் வரும். 2021ல் நடக்க இருந்த கணக்கெடுப்பு கொரோனா காரணமாக தள்ளிப் போடப்பட்டது. மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தாமல் தொகுதி மறு வரையறை எப்படி பேச முடியும்?
முதல்வருக்கு கூட்டல், கழித்தல் தெரியாது என தெரியும். ஆகவே பொது வெளியில் இப்படி பேசி, அரசாங்கத்திற்கு கெட்ட பெயரை முதல்வர் உருவாக்க வேண்டாம்.
திருநெல்வேலியில் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் கொல்லப்பட்டது குறித்து கேட்ட போது, தன் உயிருக்கு ஆபத்து இருக்கு என அவர் முன்னதாக கூறியும் அவர் கொல்லப்பட்டிருக்கின்றார். ஆகவே, தமிழ்நாடு சட்டம், ஒழுங்கு எங்கே உள்ளது? உடனடியாக, காவல்துறை கருத்தில் கொண்டு உரிய பாதுகாப்பு கொடுத்திருக்க வேண்டும். சமூகவலைத் தளத்தில் முதல்வரை விமர்சித்தால், பாரதிய ஜனதா கட்சிக்காரர்களை குண்டுகட்டாக போலீசார் தூக்கி கொண்டு போகின்றார்கள். மோடியை முட்டாள், ஆயுள் முடிந்தது, திமிர் எடுத்தவர் என்று போடும் போது ஒருநாளாவது காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளதா?
ஆனால், திருநெல்வேலியில் ஒரு உயிர் போயிருக்கிறது. மாவட்ட காவல்துறை விரைவில் கொலையாளிகளை விரைவாக கண்டுபிடிக்க வேண்டும், மக்கள் முன் நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.