
தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சிவ நாடார் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவர் ஆவார். இவர், ஹெ.சி.எல் கார்ப்பரேஷன் மற்றும் வாமா சுந்தரி இன்வெஸ்ட்மென்ட்ஸ் (டெல்லி) நிறுவனங்களில் தனக்கு சொந்தமான 51-ல் 47 சதவீத பங்குகளை, தனது ஒரே மகள் ரோஷினி நாடாருக்கு பரிசாக வழங்கியுள்ளார்.
கடந்த 6-ம் தேதி பதிவு செய்யப்பட்ட தான பத்திரம், 7-ம் தேதி தேசிய பங்குச் சந்தையில் தாக்கல் செய்யப்பட்டது. இதன்மூலம் ஹெச். சி. எல் டெக்னாலஜிஸ் மற்றும் ஹெச்.சி.எல். இன்போசிஸ்டம்ஸ் ஆகிய 2 முக்கிய நிறுவனங்கள் ரோஷினியின் கட்டுப்பாட்டில் வந்துள்ளன.
இதற்கு முன்பு , இந்த இரு நிறுவனங்களிலும் சிவ நாடாருக்கு 51% பங்குகளும் ரோஷினிக்கு 10.33% பங்குகளும் இருந்தன. இப்போது ரோஷினியின் பங்குகள் 57.33% ஆக அதிகரித்துள்ளது. அதே நேரம், சிவ நாடாரின் பங்குகள் வெறும் 4% ஆக குறைந்துள்ளது. இதன்மூலம் ஹெச்.சி. எல் குழுமத்தில் அதிக பங்குகளைக் கொண்டவராக ரோஷினி மாறியுள்ளார்.
ஹெச்.சி.எல். குழுமத்தில் ஸ்திரத் தன்மையை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட வாரிசு பங்களிப்பின் ஒரு பகுதியாகும். பங்குகளை ரோஷினிக்கு சுமூகமாக மாற்ற இந்திய பங்குச் சந்தை வாரியம் வெளிப்படையான பங்கு விற்பனை முறையில் இருந்து விலக்கு அளித்தது.
இந்த பங்கு பரிமாற்றத்தின் மூலம் நாட்டின் 3-வது பெரிய கோடீஸ்வரராக ரோஷினி உருவெடுத்துள்ளார். ரூ.7.66 லட்சம் கோடி சொத்துடன் ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதலிடத்திலும் ரூ.5.99 லட்சம் கோடி சொத்துடன் அதானி குழும தலைவர் கவுதம் அதானி 2-ம் இடத்திலும் உள்ளனர். இவர்களுக்கு அடுத்தபடியாக ரூ.3.12 லட்சம் கோடி சொத்துடன் ரோஷினி நாடார் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் மூலைப்பொழி கிராமத்தை சேர்ந்த சிவ நாடார் , 1976 ஆம் ஆண்டு ஹெச். சி.எல் நிறுவனத்தை உருவாக்கினார். தற்போது, உலகின் 37வது மிகப் பெரிய பணக்காரராக உருவெடுத்துள்ளார்.