
திருநெல்வேலி சரக காவல்துறையினருக்கான சாலை பாதுகாப்பு மற்றும் விபத்து தடுப்பு குறித்த ஒருநாள் பயிற்சி வகுப்பு நேற்று தூத்துக்குடி மாவட்ட காவல் காண்காணிப்பாளர் அலுவலகத்தில் திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பா. மூர்த்தி மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இந்த பயிற்சி வகுப்பில் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் முதல் காவலர்கள் வரை 75 காவல்துறையினருக்கு முதலுதவி சிகிச்சை மற்றும் அதன் செயல்முறை விளக்கங்கள் அளிக்கப்பட்டது
தொடர்ச்சியான போக்குவரத்து விதிமீறல்களை அடையாளம் காண்பது, திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டங்கள் மற்றும் சாலை விதிகள், RSTF கள ஆய்வு விண்ணப்பங்கள், IRAD/e-DAR விண்ணப்பங்கள் ஆகியவை குறித்தும் அவற்றின் செயல்பாடுகள் குறித்தும் தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல் சார்பு ஆய்வாளர் அச்சுதன், தூத்துக்குடி தொழில்நுட்ப பிரிவு காவல் சார்பு ஆய்வாளர் சங்கர் கணேஷ், கோவில்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் மோசஸ் பவுல், தூத்துக்குடி 108 அவசர ஊர்திகள் ஒருங்கிணைப்பாளர் அருள்குமார், வ.உ.சி பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் ராஜகுமார், ஸ்ரீவகுண்டம் குற்றவியல் நீதிமன்ற அரசு உதவி வழக்கறிஞர் செய்யது அலி பாத்திமா, மாவட்ட ஆட்சியர் அலுவலக தேசிய தகவல் மைய அதிகாரி சங்கர் ஆகியோர் பயிற்சிகள் குறித்து செயல்முறை விளக்கங்களுடன் விரிவாக எடுத்துரைத்தனர்.
முடிவில், தொடர்ந்து திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் பா. மூர்த்தி பயிற்சி அளித்த சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் கேடயங்கள் வழங்கியும், இந்த வகுப்பில் பங்கு பெற்ற காவல்துறையினருக்கு சான்றிதழ் வழங்கினார். நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் ஆறுமுகம், தீபு, சகாய ஜோஸ் உட்பட காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.