
தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினர் சமூக வலைதள பக்கங்களில் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலோ, புகைப்படங்களை சித்தரித்தோ சாதிய ரீதியான மோதல்களை உருவாக்கும் வகையில் பதிவுகளை வெளியிடுபவர்களை தொடர்ந்து கண்காணித்து சட்டப்படியான நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் திருச்செந்தூர் யானை சாலை தெருவை சேர்ந்த சங்கரன் நயினார் என்பவரின் மகன் மணிகண்டன் (35) என்பவர் அவரது முகநூல் பக்கத்தில் தேசிய தலைவர்கள் குறித்து அவதூறாகவும், சாதி ரீதியான மோதல்களை ஏற்படுத்தும் வகையிலும் அவதூறான கருத்துக்களை பதிவிட்டு வந்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல், மணிகண்டன் மார்ச் 20 ம் தேதி புதுக்கோட்டையை அடுத்துள்ள கூட்டாம்புளி பேருந்து நிறுத்தம் அருகே ஒருவரிடம் அரிவாளை காட்டி மிரட்டி பணம் பறித்துச் சென்றுள்ளார். இதனையடுத்து உடனடியாக புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஏற்கனவே , மணிகண்டன் மீது, சமூக வலைத்தளங்களில் அவதூறான கருத்துக்களை பதிவிட்டதாக திருச்செந்தூர் காவல் நிலையத்தில் 4 வழக்குகளும், ஏரல் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், சென்னை அண்ணா நகர் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் என மொத்தம் 7 வழக்குகள் உள்ளன.
பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலோ, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலோ கருத்துக்களை பதிவிடுபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது.