
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் பிறந்தவர் நெல்சன் பொன்ராஜ். சிறுவயது முதலே மற்றவர்களுக்கு உதவும் குணம் கொண்டவர். இவர் ஆசிரியர் பணியில் கடந்த 2000 ஆம் ஆண்டில் சேர்ந்தார். முதல் முதலாக கூட்டாம்புளி றி.என்.டி.றி.ஏ தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியில் சேர்ந்தார். பணி கிடைத்தது முதலே, மாணவர்களுக்கு தனது சம்பளத்தில் இருந்து பல உதவி செய்ய ஆரம்பித்தார். கஷ்டப்பட்ட மாணவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வந்தார். இதனால் பல்வேறு தரப்பில் இவருக்கு பாராட்டு கிடைத்து வந்தது.
2012 ஆம் ஆண்டு செய்துங்கநல்லூர் றி.என்.டி.றி.ஏ தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றார். அங்கு படித்த மாணவர்களோ, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் மற்றும் துப்புறவு பணியாளர்களின் குழந்தைகள். அவர்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த முதலில் திட்டமிட்டார். பள்ளி மாணவ மாணவர்களுக்கு தனியார் பள்ளிக்கு நிகரான சீருடை, சூ, டை, ஐடி கார்டு வழங்க ஏற்பாடு செய்தார். மாணவர்கள் கம்ப்யூட்டர் கல்வி கற்க சொந்த செலவில் கம்ப்யூட்டர் வாங்கி பயிற்சி கொடுத்தார்.
செல்போனை கூட அறியாத மாணவர்கள் கம்ப்யூட்டரில் அமர்ந்து கீபோர்டில் வேலைசெய்து முகம் மகிழ்ந்தனர். இதற்கிடையே, 2014ம் ஆண்டு அவருக்கு பணிமாறுதல் உத்தரவு வந்தது. அதாவது, பண்டாரம்பட்டி தொடக்கப்பள்ளிக்கு மாற்றப்பட்டார். அப்போது அங்கு இருந்ததோ 7 மாணவ மாணவிகள்தான். இவரது அயராத உழைப்பால் இன்று 50 மாணவ மாணவிகள் இந்த பள்ளியில் படிக்கிறார்கள். பின்னர், கொரோனா தொற்று நோய் வந்தது. உலகத்தையே கட்டிப்போட்டது. அப்போது கிடைத்த சம்பளம் ரூ 7 லட்சத்தை கொண்டு பண்டாரப்பட்டி பள்ளியில் ஒரு கட்டடம் கட்டிக் கொடுத்தார். இவரின் செயலை கண்டு எல்லோரும் மகிழ்ந்தனர். அன்பாசிரியர், சிறப்பாசிரியர் என பட்டம் கொடுத்து பாராட்டினர். தமிழக அரசு நல்லாசிரியர் விருதை வழங்கி கௌரவித்தது.
நன்கொடையாளர்களின் உதவியுடன் மேலும் 17 லட்ச ரூபாய் செலவில் மற்றுமொரு கட்டடம் இந்த பள்ளியில் கட்டப்பட்டது. தொடர்ந்து இவர் கட்டிய கட்டட த்துக்கு மேல் முன்னாள் மாணவர் உதவியுடன் 4 லட்சம் செலவில் மாற்றொரு மாடி கட்டப்பட்டது. அதில், ஆசிரியர் நெல்சன் பொன்ராஜ், 1 லட்சத்து 20ஆயிரம் செலவில் டிஜிட்டல் திரை அமைத்துள்ளார். இதனால், மாணவர்கள் டிஜிட்டல் முறையில் பாடம் கற்கும் சூழலும் உருவானது.
ஒரு முறை ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆசிரியர் நெல்சன் பொன்ராஜ், பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது , அறிவியல் பாடத்தில் விலங்குகள் குறித்தும், சமூக அறிவியல் பாடத்தில் போக்குவரத்து குறித்தும் பாடமும் இடம் பெற்றிருந்தது. அப்போது, ஒரு மாணவன், “தினமும் எங்கள் தலைக்கு மேலே விமானம் பறக்கிறது. அருகில் தான் ரயில் செல்லும் சத்தம் கேட்கிறது ஆனால், நாங்கள் ஒரு நாளும் விமானத்திலும் ரயிலிலும் பயணம் செய்ய வில்லை” என ஏக்கமாக தெரிவித்துள்ளான். விலங்குகளை பார்க்க வேண்டும் என்றால் வண்டலூர் மிருககாட்சிசாலைக்குத்தான் செல்லவேண்டும். ஆனால் எங்கள் வறுமையில் நாங்கள் எங்கே செல்ல முடியும்” என்றும் கேட்டுள்ளான்.
அன்றைய தினம் இரவு ஆசிரியர் நெல்சன் பொன்ராஜுக்கு தூக்கம் வரவில்லை. மாணவன் சொன்ன வார்த்தையை நினைத்து கொண்டிருந்துள்ளார். பின்னர், தனது மாணவர்கள் ஆசையை நிறைவேற்ற திட்டமிட்டார். தொடர்ந்து, மாணவர்களை விமானத்தில் சென்னை அழைத்துச் சென்று வண்டலூர் மிருகாட்சி சாலையை பார்க்க வைத்த திட்டமிட்டார். இதற்காக மார்ச் 22 ஆம் தேதி தூத்துக்குடியில் இருந்து காலை காலை 6 மணிக்கு கிளம்பும் விமானத்தில் தன்னிடம் 5 ஆம் வகுப்பு படிக்கும் பத்து மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் 7 பேர், மற்றும் இரண்டு பெற்றோர்களை அழைத்துக்கொண்டு சென்னை செல்கிறார். இந்த பயணத்துக்காக அவர் ரூ. 1.50 லட்சம் செலவழித்துள்ளார்.
சென்னை வரும் மாணவர்கள் மின்சார ரயில் மூலம் வண்டலூர் மிருககாட்சிசாலைக்கு சென்று, அங்கே பகல் முழுவதும் மிருகங்களை பார்த்துவிட்டு, அருகில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து மெட்ரோ ரயில் மூலமாக எக்மோர் வருகின்றனர். பின்னர், முத்து நகர் எக்ஸ்பிரஸில் தூத்துக்குடி திரும்புகிறார்கள். சோ... ஒரே பயணத்தில் விமானம் மற்றும் ரயில்பயண அனுபவங்களை மாணவர்கள் பெறும் வகையில், இந்த சுற்றுலா திட்டத்தை அவர் வடிவமைத்துள்ளார்.
மாணவர்களின் ஆசையை நிறைவேற்ற ஒரு ஆசிரியர் எடுக்கும் முயற்சி மற்ற ஆசிரியர்களுக்கு பாடமாகவே அமைந்து விட்டது என்றுதான் சொல்ல தோன்றுகிறது.