
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் சோதனைசாவடியில் கடந்த மார்ச் 6 ஆம் தேதி மாலை 6 மணியளவில் செய்துங்கநல்லூர் காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, காயல்பட்டினத்தை சேர்ந்த சையத் முகமது என்பவரின் மகன் சாகுல் ஹமீது (28) என்பவர் நம்பர் பிளேட் இல்லாத இருசக்கர வாகனத்தில் திருநெல்வேலியிலிருந்து சென்று கொண்டிருந்த போது பிடிபட்டார்.
சாகுல் ஹமீதை நிறுத்தி விசாரித்த போது, அவர் ஆர்.சி. புத்தகத்தைக் காட்டவில்லை. இதனால், சிறப்பு சார்பு ஆய்வாளர் மோட்டார் வாகன சட்டப்படி வழக்குப் பதிவு செய்தார். இதற்கு முன்பும் அவர் இது போன்று சிக்கியிருப்பதால், தானியங்கி இயந்திரத்தில் ரூ. 1500/- அபராதம் விதிக்கப்பட்டு, இ சலான் கொடுக்கப்பட்டது. அபராத தொகை அதிகமாக இருப்பதாக கூறி , சாகுல் ஹமீது சிறப்பு ஆய்வாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, வீடியோவாக பதிவு செய்து சோசியல் மீடியாவிலும் பதிவு செய்தார்.
வீடியோ வைரலானதை தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் விசாரணைக்கு உத்தரவிட்டார். விசாரணைக்கு பிறகு, தூத்துக்குடி காவல் துறை அளித்த விளக்கத்தில் கூறியிருப்பதாவது, ' சாகுல் ஹமீது பல முறை போக்குவரத்து விதிமுறைகளை மீறியிருப்பது தெரிய வந்தது. பேட்டை காவல் நிலையத்தில் 11.6.2024 அன்றும் திருச்செந்தூர் கோவில் காவல் நிலையத்தில் 10.7.2023 அன்றும் மோட்டார் வாகன சட்டத்தின் விதிகளை மீறியதாக இதே வாகனத்தின் மீது ஏற்கனவே அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக, அதே முறையில் வாகனத்தை ஓட்டி வந்த சாகுல் ஹமீது மீண்டும் சிக்கியதால் ரூ. 1, 500 அபராதத்தை தானியங்கி இயந்திரம் விதித்துள்ளது. அதோடு, இ சலானும் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. மோட்டார் வாகன சட்டம் 130 r/w 177 பிரிவின்படி, வீதிமீறலில் ஈடுபடும் போது முதல் முறை ரூ. 500 அபராதமும், அதே விதிமீறல்களில் தொடர்ச்சியாக ஈடுபடும்போது, ரூ .1500 அபராதமும் தானாகவே பதிவாகும்.
இதில், அபாரதம் விதித்த சிறப்பு சார்பு காவல் ஆய்வாளர் மீது எந்த தவறும் இல்லை. அவர் தனது பணியை செவ்வனே செய்துள்ளார்.'
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.